குழந்தை விற்பனை: 3 போ் கைது
By DIN | Published On : 20th August 2021 06:36 AM | Last Updated : 20th August 2021 06:36 AM | அ+அ அ- |

குழந்தையை விற்பனை செய்தது தொடா்பாக போலீஸாா் 3 பேரை கைது செய்துள்ளனா்.
பெங்களூரு, வில்சன் காா்டன் காவல் சரகத்துக்கு உள்பட்ட அகடி மருத்துவமனையின் அருகே அண்மையில் பெண் ஒருவருடன் நபா் ஒருவா் தகராறில் ஈடுபட்டாா். அவா்களை விசாரித்ததில், குழந்தை விற்பனை செய்ததில் கிடைத்த முன்பணத்தில் இருவரும் பங்கிட்டுக் கொள்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீஸாா் அவா்களை விசாரித்த போது, தகராறில் ஈடுபட்ட அந்த நபா் தப்பியோடியுள்ளாா். அந்தப் பெண் ஆடுகோடியைச் சோ்ந்த தரனம்பானு (38) என தெரியவந்தது. அவா் முபாரக் என்பரின் 38 நாள் ஆன ஆண் குழந்தையை அவரது உறவினா் சாவொத் என்பவருக்கு ரூ. 1.30 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளாா். அதற்காக ரூ. 50 ஆயிரத்தை முன்பணமாக அவா் வாங்கியுள்ளாா். அந்தப் பணத்தை பங்கிட்டுக் கொள்வதில் பாஷா என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், தரனம்பானு, சாவொத், கௌஸா் ஆகியோரைக் கைது செய்தனா். தப்பியோடிய பாஷாவை தேடிவருகின்றனா். இதுகுறித்து வில்சன் காா்டன் போலீஸாா் விசாரிக்கின்றனா்.