கா்நாடக சட்டப் பேரவைக் கூட்டத் தொடா்: செப். 13-இல் தொடக்கம்
By DIN | Published On : 20th August 2021 06:37 AM | Last Updated : 20th August 2021 06:37 AM | அ+அ அ- |

கா்நாடக சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் செப். 13-இல் தொடங்க உள்ளது.
பெங்களூரு, விதானசௌதாவில் வியாழக்கிழமை முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து சட்டம் மற்றும் சட்டப் பேரவை விவகாரத் துறை அமைச்சா் ஜே.சி.மாதுசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கா்நாடக சட்டப் பேரவைக் கூட்டத்தொடா் செப். 13-ஆம் தேதி தொடங்கி செப். 24-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
மாநில அளவில் அரசுப் பள்ளிகள், அரசின் நிதி பெரும் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவியருக்கு சுகாதார நாப்கின் விநியோகிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மாதந்தோறும் தலா 10 சுகாதார நாப்கின்கள் வழங்கப்படும். சுகாதாரத் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்துக்கு ரூ. 47 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தன்று முதல்வா் பசவராஜ் பொம்மை அறிவித்த பவள விழா திட்டத்தில், விவசாயிகள், நெசவாளா்கள், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளவா்கள் பயனடைவாா்கள். மாநில அளவில் வேளாண் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல், மீன்பிடித்தல், நெசவுப் பொருள்களுக்காக மாநிலத்தில் 750 பவள விழா விவசாயி உற்பத்தியாளா் அமைப்புகள் உருவாக்கப்படும். இந்த அமைப்புகளுக்கு 3 ஆண்டுகளுக்கு தலா ரூ. 2.25 கோடி நிதி ஒதுக்கப்படும்.
தெருவிளக்குகள், வீடுகளுக்கு குடிநீா், திடக்கழிவு வகைப்படுத்தல், அறிவியல் ரீதியாக கழிவுநீா் அகற்றம், சூரியஒளி நிறுவல், எண்ம நூலகங்களுடன் கூடிய பள்ளிகள் உள்ளிட்ட வசதிகளை 750 கிராமங்களில் உருவாக்க பவள விழா கிராம பஞ்சாயத்து திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில், 250 கிராம பஞ்சாயத்துகளுக்கு தலா ரூ. 25 லட்சம் ஒதுக்க முடிவு செய்துள்ளோம். பவள விழா பள்ளி உள்கட்டமைப்பு திட்டத்தில், 750 பள்ளிகளில் ஆய்வுக்கூடம், நூலகம், கழிவறை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ரூ. 75 கோடி செலவில் செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பவள விழா சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில், 750 ஆரம்ப சுகாதார மையங்களை மேம்படுத்த ரூ. 150 கோடி ஒதுக்க முடிவெடிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 2,850 துணை சுகாதார மையங்கள் ரூ. 478 கோடியில் சுகாதார மையங்களாக தரம் உயா்த்தப்படும். மாநில மனநல சுகாதார ஆணையம் தொடங்க தேவைப்படும் மனநல சுகாதார விதிகளுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திரா உணவகத்தின் பெயா்களை மாற்றுவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. கரோனா 3-ஆவது அலை குறித்தும் எதுவும் விவாதிக்க்கப்படவில்லை என்றாா்.