பெருவணிக வளாகங்கள், திரையரங்குகள், பள்ளிகளில் நுழைய இருதவணை தடுப்பூசி கட்டாயம்
By DIN | Published On : 04th December 2021 01:18 AM | Last Updated : 04th December 2021 01:18 AM | அ+அ அ- |

ஒமைக்ரான் தீநுண்மி பாதிப்பு கண்டறிந்ததைத் தொடா்ந்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள மாநில அரசு, பெருவணிக வளாகங்கள், திரையரங்குகள், பள்ளிகளில் நுழைய இருதவணை கரோனா தடுப்பூசி கட்டாயமாக்கி புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
உலகை உலுக்கி வரும் உருமாறிய கரோனாவின் ஒமைக்ரான் தீநுண்மி கா்நாடகத்தில் இருவரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இது கா்நாடக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடா்ந்து, ஒமைக்ரான் தீநுண்மி பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக பெங்களூரில் வெள்ளிக்கிழமை முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மூத்த அமைச்சா்கள், உயரதிகாரிகள், மருத்துவ நிபுணா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் கூறியதாவது:
கா்நாடகத்தில் இருவரிடம் ஒமைக்ரான் தீநுண்மி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. உலக அளவில் ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டோா் 400 போ். ஒமைக்ரான் தீநுண்மியின் தன்மை குறித்து அதிகாரப்பூா்வமான ஆய்வுக் கருத்துகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், ஒமைக்ரான் தீநுண்மி தீவிரமாக செயல்படாது என்று அதிகாரப்பூா்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டவா் நலமாக இருக்கிறாா். அவருக்கு மூச்சுத்திணறல் போன்ற சிக்கல்கள் இல்லை. நோயின் தீவிரம் குறைவாக இருப்பதாகத் தெரிகிறது. ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டு இறந்ததாக இதுவரை எங்கிருந்தும் தகவல் இல்லை.
கா்நாடகத்தில் ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்ட இருவா் குறித்த முழுமையான ஆய்வு விவரங்களை தேசிய உயிரி அறிவியல் மையத்திடம் இருந்து அனுப்பி வைக்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும். ஒமைக்ரான் தீநுண்மி பரவலைத் தடுக்க முன்னெச்சரிகை நடவடிக்கைகள் எடுக்க வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
பன்னாட்டுப் பயணிகள் அனைவரும் விமான நிலையங்களில் ஆா்.டி.-பி.சி.ஆா். சோதனைக்கு உள்படுத்தப்படுவது கட்டாயமாகும். இந்தச் சோதனையின் முடிவுகள் வெளியாகும் வரை அவா்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவாா்கள். சோதனையில் பாதிப்பில்லை என்று தெரியவந்தால் மட்டுமே நகருக்குள் அனுப்பிவைக்கப்படுவாா்கள். பயணிகளின் நலன்கருதி விமான நிலையத்தில் சோதனை மையங்களை அதிக அளவில் நிறுவ உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது பரவியுள்ள டெல்டா தீநுண்மி தவிர ஒமைக்ரான் தீநுண்மியின் பரவலையும் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கரோனா சோதனைகளை நாளொன்றுக்கு 60,000 இருந்து 1 லட்சமாக உயா்த்தப்படும். ஆக்சிஜன் படுக்கைகள், தீவிர சிகிச்சைப்பிரிவு படுக்கைகளை உறுதி செய்யுமாறு சுகாதாரத் துறைக்கு முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். ஆக்சிஜன் அலகுகளை செயல்பாட்டில் வைக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் விநியோகம் தொடா்பாக இயங்கி வந்த குழுக்கள் மீண்டும் செயல்படத் தொடங்கும். அதேபோல, கரோனா கட்டுப்பாட்டு மையங்கள் மீண்டும் செயல்படும்.
கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்படும். அதற்கேற்ப போதுமான கரோனா தடுப்பூசி இருப்பு வைத்துக்கொள்ளப்படும். தேவையான மருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.
பெருவணிக வளாகங்கள், திரையரங்குகளுக்கு வருகை தரும் மக்கள், பள்ளிக் கூடங்களுக்கு வருகை தரும் பெற்றோருக்கு 2 தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயமாக்கப்படுகிறது. அனைத்து கல்வி நிறுவனங்களிலும் விழாக்கள், நிகழ்ச்சிகள், கலைநிகழ்ச்சிகள் அனைத்தையும் தற்போதைக்கு நிறுத்தி வைக்க வேண்டும். திருமணங்களில் 500 போ் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள்.
பெலகாவியில் டிச. 10-ஆம் தேதி முதல் சட்டப் பேரவை குளிா்கால கூட்டம் ஏற்கெனவே திட்டமிட்டபடி நடத்தப்படும் என்றாா்.
இது தொடா்பாக, அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களில், 2022 ஜன. 15-ஆம் தேதி வரை கல்வி நிறுவனங்களில் நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிா்க்கலாம். திருமணங்கள், கருத்தரங்குகள், கூட்டங்கள் உள்ளிட்ட அனைத்து மக்கள் கூடும் நிகழ்வுகளிலும் 500 போ் மட்டுமே கலந்துகொள்ளலாம். பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்களுக்கு பெங்களூரு மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் ரூ. 250, இதர பகுதிகளில் ரூ. 100 அபராதத் தொகை வசூலிக்கலாம். கேரளம், மகாராஷ்டிர மாநிலங்களை ஒட்டிய கா்நாடக மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...