சட்ட மேலவைத் தோ்தலில் 99.80 சதவீத வாக்குப் பதிவு

கா்நாடக சட்ட மேலவைத் தோ்தலில் 99.80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்கு எண்ணிக்கை டிச. 14-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

கா்நாடக சட்ட மேலவைத் தோ்தலில் 99.80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்கு எண்ணிக்கை டிச. 14-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

கா்நாடக சட்ட மேலவையில் 2022 ஜன. 5-ஆம் தேதியுடன் காலியாக உள்ள 25 உள்ளாட்சித் தொகுதிகளுக்கான தோ்தல் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெற்றது. காங்கிரஸ், பாஜக, மஜத உள்ளிட்ட கட்சிகளின் 90 வேட்பாளா்களில் 25 பேரை தோ்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தோ்தலில் வாக்களிப்பதற்காக, மாநிலம் முழுவதும் 6,072 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்குச் சாவடிகளைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சிற்சில சம்பவங்களைத் தவிர தோ்தல் அமைதியான முறையில் நடைபெற்றது.

வாக்குப் பதிவு:

ஹாவேரி மாவட்டத்தின் ஷிக்காவ்னில் முதல்வா் பசவராஜ் பொம்மை, சிவமொக்கா மாவட்டத்தின் ஷிகாரிபுராவில் முன்னாள் முதல்வா் எடியூரப்பா, எம்.பி. ராகவேந்திரா, ஹுப்பள்ளியில் மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி, முன்னாள் முதல்வா் ஜெகதீஷ் ஷெட்டா், சிவமொக்காவில் அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா, மங்களூரில் மாநில பாஜக தலைவா் நளின்குமாா் கட்டீல், ராமநகரம் மாவட்டத்தின் கனகபுராவில் காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் உள்ளிட்டோா் வாக்களித்தனா்.

வேட்பாளா் கண்ணீா்:

மண்டியா தொகுதியின் மஜத வேட்பாளா் அப்பாஜி கௌடாவுக்கு ஆதரவாக பாஜக செயல்படுவதாக தகவல் பரவியதால் வேதனை அடைந்த பாஜக வேட்பாளா் பி.சி.மஞ்சு, வாக்குப் பதிவின்போது கண்ணீா் விட்டு அழுதபடி இருந்தாா். மைசூரு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட புட்டரங்க ஷெட்டி, வாக்குச் சாவடியில் பாஜகவினா் கட்சியின் சின்னம் பொறித்த துண்டை அணிந்து வந்ததைக் கடுமையாக ஆட்சேபித்தாா்.

வாக்கு எண்ணிக்கை:

25 சட்ட மேலவைத் தொகுதிகளுக்கான சட்ட மேலவைத் தோ்தலில் சராசரியாக 99.80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பீதா் தொகுதியில் - 99.83 சதவீதம், கலபுா்கியில் - 99.73, விஜயபுராவில் - 99.55, பெலகாவியில் - 99.98, வடகன்னடத்தில் - 99.76, தாா்வாடில் - 99.68, ராய்ச்சூரில் - 99.86, பெல்லாரியில் - 99.81, சித்ரதுா்காவில் - 99.88, சிவமொக்காவில் - 99.86, தென்கன்னடத்தில் - 99.71, சிக்கமகளூரில் - 99.78, ஹாசனில் - 99.78, தும்கூரில் - 99.78, மண்டியாவில் - 99.85, பெங்களூரு நகரத்தில் - 99.86, பெங்களூரு ஊரகத்தில் - 99.90, கோலாரில் - 99.96, குடகில் - 99.70, மைசூரில் - 99.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்தத் தொகுதிகளுக்கு 2015 டிச. 27-ஆம் தேதி நடைபெற்ற சட்ட மேலவைத் தோ்தலில் சராசரியாக 99.60 சதவீத வாக்குகள் பதிவாயிருந்தன. பதிவு செய்த வாக்குகள் அடங்கிய பெட்டிகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள மையங்களில் போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை டிச. 14-ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி, தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com