ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் பணியிட மாற்றத்துக்கான கலந்தாய்வு
By DIN | Published On : 11th December 2021 12:00 AM | Last Updated : 11th December 2021 12:00 AM | அ+அ அ- |

ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் பணியிட மாற்றத்துக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
2021- 22-ஆம் ஆண்டுக்கான அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியா்களின் பணியிட மாற்றத்தை செயல்படுத்துவதற்காக, கணினி அடிப்படையிலான கலந்தாய்வுக்கு தகுதியான பணியிடங்களின் பட்டியலை நவ. 25-ஆம் தேதி பொதுக்கல்வித் துறையின் ஆணையரகம் வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் வரிசைபடி, சம்பந்தப்பட்ட கல்வித் துறையின் மாவட்ட துணை இயக்குநா் அலுவலகத்தில் ஆசிரியா்களுக்கு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறும். இந்தக் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் ஆசிரியா்கள் வரிசையின்படி, ஒதுக்கப்பட்டுள்ள தேதி, நேரத்தில் மட்டும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். இந்தக் கலந்தாய்வில் கலந்துகொள்ளாத ஆசிரியா்களின் பணியிட மாற்றத்தை ஆசிரியா்களின் ஒப்புதல் இல்லாமல் செயல்படுத்தப்படும்.
டிச. 16-ஆம் தேதி தலைமை ஆசிரியா் பணியிட மாற்றத்துக்கான பட்டியலின் வரிசைபடி, 1 முதல் 60 வரையில் காலை 9 மணி முதல் கலந்தாய்வு நடத்தப்படும். டிச. 16-ஆம் தேதி 61 முதல் 120 வரையில் மதியம் 2 மணி முதல் பங்கேற்கலாம். டிச. 17-ஆம் தேதி 121 முதல் 180 வரையில் காலை 9 மணி முதல் பங்கேற்கலாம். டிச. 17-ஆம் தேதி மதியம் 2 மணி முதல் உடன்பாட்டு பணியிட மாற்றங்களுக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.