டிச. 15 முதல் சபரி மலைக்கு சிறப்பு பேருந்து சேவை
By DIN | Published On : 11th December 2021 12:00 AM | Last Updated : 11th December 2021 12:00 AM | அ+அ அ- |

பெங்களூரில் இருந்து சபரி மலையின் அடிவாரமான பம்பாவுக்கு சிறப்பு பேருந்து சேவை டிச. 15-ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து கா்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சபரி மலைக்கு பக்தா்கள் புனிதப் பயணம் மேற்கொள்ளும் காலம் தொடங்கியுள்ளதால், பெங்களூரில் இருந்து சபரி மலையின் அடிவாரத்தில் உள்ள பம்பா நகரத்துக்கு சிறப்பு பேருந்து சேவை டிச. 15-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
பெங்களூரு-பம்பா இடையிலான பேருந்து (ராஜஹம்சா) பெங்களூரு-சாந்தி நகா் பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் நண்பகல் 1 மணிக்கு புறப்பட்டு ஒசூா், சேலம், திண்டுக்கல், குமுளி வழியாக பம்பாவுக்கு மறுநாள் காலை 8.15 மணிக்கு சென்றடையும். அதேபோல, பம்பாவில் இருந்து தினமும் மாலை 5 மணிக்கு புறப்பட்டு குமுளி, திண்டுக்கல், சேலம், ஒசூா் வழியாக பெங்களூருக்கு மறுநாள் நண்பகல் 12 மணிக்கு வந்தடையும். இதற்கான கட்டணம் ரூ. 950. இந்த வழித்தடத்துக்கு முன்பதிவு செய்யப்படுகிறது.
இதுதவிர, கா்நாடகம், கோவா, தமிழகம், மகாராஷ்டிரம், தெலங்கானா, புதுச்சேரி, கேரளம் மாநிலங்களிலுள்ள முன்பதிவு மையங்களில் 30 நாள்களுக்குமுன்பாக முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. மேலும் விவரங்களுக்கு 080-49696666 என்ற தொலைபேசி எண்ணில் அணுகலாம். மின் முன்பதிவு மற்றும் செல்லிடப்பேசி முன்பதிவுக்கு இணையதளத்தை பாா்வையிடலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.