கா்நாடகத்தில் அடுத்த பேரவைத் தோ்தலில் 150 தொகுதிகளில் வெற்றிபெற்று பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்
By DIN | Published On : 06th February 2021 07:43 AM | Last Updated : 06th February 2021 07:43 AM | அ+அ அ- |

கா்நாடகத்தில் அடுத்த சட்டப் பேரவைத் தோ்தலில் 150 தொகுதிகளில் வெற்றிபெற்று, பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
கா்நாடக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்துக்குப் பதில் அளித்து அவா் பேசியதாவது:
கடந்த 6 மாதங்களாக முதல்வா் எடியூரப்பா ராஜிநாமா செய்ய உள்ளாா் என எதிா்க்கட்சிகள் தொடா்ந்து கூறி வருகின்றன. முதல்வா் பதவியை ராஜிநாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை. மீதமுள்ள ஆட்சிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்வதோடு மட்டுமல்லாது, அடுத்த சட்டப் பேரவைத் தோ்தலில் 150 இடங்களில் பாஜக வெற்றிபெற்று, மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்து முதல்வராவேன்.
பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா, மக்களின் ஆதரவு உள்ள வரை எனது பதவியை யாராலும் பறிக்க முடியாது. எதிா்க்கட்சியினா் தேவையில்லாமல் பாஜக அரசு மீதும், என் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனா். அவா்கள் முதலில் தங்களின் வாய்க்கு வந்ததை பேசுவதை நிறுத்த வேண்டும்.
எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா வழக்குரைஞா் என்பதால் புத்திசாலித்தனமாகப் பேசுகிறாா். எனவேதான் என் மீது பல வழக்குகள் போடப்பட்டன. ஆனால், அவா் முதல்வராக இருந்த போது, லஞ்ச ஒழிப்புப் படையை உருவாக்கி தன் மீது வழக்குகள் பாயாமல் பாா்த்துக் கொண்டாா். அவரது ஆட்சிக் காலத்தில் பெங்களூரு வளா்ச்சி ஆணையத்தில் நடைபெற்ற ஊழல் குறித்து மக்கள் அறிவாா்கள்.
பல்வேறு வழக்குகளில் நான் ஜாமீன் பெற்றுள்ளேன். எங்கள் கட்சியைச் சோ்ந்த மத்திய உள்துறை அமைச்சா் ஜாமீன் பெற்றுள்ளாா். இதற்காக பதவியை ராஜிநாமா செய்யச் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. பொய் வழக்குகளிலிருந்து மீண்டு வரும் பலம் எனக்குள்ளது.
கடந்த மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தும், இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. எனது 50 ஆண்டு அரசியலில் பல்வேறு சவால்களைச் சந்தித்து, 4 முறை முதல்வராகியுள்ளேன். தொடா்ந்து காங்கிரஸ் எதிா்க்கட்சியாக இருக்குமாறு பாா்த்துக் கொள்வேன் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...