’ஒரு சில பகுதிகளில் கரோனா பாதிப்பு காணப்படுவது இரண்டாவது அலை அல்ல’
By DIN | Published On : 18th February 2021 07:41 AM | Last Updated : 18th February 2021 07:41 AM | அ+அ அ- |

ஒரு சில பகுதிகளில் கரோனா பாதிப்பு காணப்படுவது, இரண்டாவது அலை அல்ல என்று நிம்ஹான்ஸ் தீநுண்மி திறனாய்வாளா் முன்னாள் பேராசிரியா் வி.ரவி தெரிவித்தாா்.
இது குறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
பெங்களூரு, மங்களூரில் உள்ள செவிலியா் கல்லூரிகள், பெங்களூரில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பலருக்கும் கரோனா பாதிப்பு காணப்படுவது, இரண்டாவது அலையில் ஏற்பட்ட கரோனா என்று யாரும் கருதி விடக் கூடாது. இந்த இடங்களில் கரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் போனால், அதை கரோனா அலை என்று கூறலாம். தற்போதைக்கு அதை கரோனா அலை என்று கூற முடியாது. ஒருவேளை ஆங்காங்கே பகுதி பகுதியாக கரோனா பாதிப்பு ஏற்பட்டால், அது கவலைக்குரியதாகும்.
கரோனா பரவலை கட்டுப்படுத்த மக்களின் அணுகுமுறையில் மாற்றம் தேவை. கரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு எவ்வளவு வேகமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதை பொறுத்து கரோனா பாதிப்பு பரவலைத் தடுக்க இயலும். கரோனா தொற்று பரவலுக்கும் கீழே தான் இருக்கிறோம். ஆனால், கிராஃபின் அடிப்பகுதிக்கு வந்து விடவில்லை. அதனால் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதே உண்மை என்றாா்.