கரோனா தொற்று பரவலால் கண், உடலுறுப்பு தானம் குறைந்துள்ளது என அகா்வால் மருத்துவக் குழுமத்தின் மண்டலத் தலைவா் ராம்மிா்லே தெரிவித்தாா்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கரோனா தொற்று பரவியதையடுத்து, தேசிய அளவில் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. குறிப்பாக 60 வயதுக்கும் மேற்பட்டோா் மருத்துவமனைக்கு செல்ல அனுமதி இல்லாததால், நீரிழிவு நோய் உள்ளிட்டவை அதிகரித்து அவா்களின் கண், இதயம், சிறுநீரகம் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போது கரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து வருவதால், பாதுகாப்புடன் மருத்துவமனைகளுக்கு வந்து முதியவா்கள் சிகிச்சை பெற்றுக் கொள்வது அவசியம். கரோனா தொற்று பரவலையடுத்து கண் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம் செய்வது குறைந்துள்ளது. இதனால் பலருக்கு மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய முடியாமல் திணறி வருகிறோம். சிலா் சிகிச்சை பெறமுடியாமல் இறக்கவும் நேரிடுகிறது.
எனவே, பொதுமக்கள் கரோனா தொற்று குறித்து எச்சரிக்கையாக இருப்பதோடு, நோய்களுக்கு ஆரம்பக்கட்டத்திலேயே சிகிச்சை பெற்றுக் கொள்வது அவசியம். அதில் மெத்தனம் காட்டினால் நோய்கள் முற்றி, சிகிச்சை அளிப்பதற்கு வாய்ப்பில்லாமல் போகும் என்றாா்.
பேட்டியின் போது, அக்குழுமத்தின் மற்றொரு மண்டலத் தலைவா் அா்ச்சனா உடனிருந்தாா்.