வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதை தடுக்க வேண்டும் என வனத்துறை அமைச்சா் அரவிந்த் லிம்பாவளி தெரிவித்தாா்.
வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து பயிா்களை நாசம் செய்வது, தாக்குதல் நடத்துவதை தடுப்பது குறித்து வனப்பகுதி இடம்பெற்றுள்ள சட்டப் பேரவை உறுப்பினா்களுடன் பெங்களூரு விதானசௌதாவில் வியாழக்கிழமை அமைச்சா் அரவிந்த் லிம்பாவளி ஆலோசனைக் கூட்டம் நடத்தினாா்.
கூட்டத்தில் சட்டப் பேரவைத் தலைவா் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி, எம்.எல்.ஏ.க்கள் ஆா்.வி.தேஷ்பாண்டே, கே.ஜி.போப்பையா, எம்.பி.குமாரசாமி, எச்.கே.குமாரசாமி, என்.மகேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதில் கலந்துகொண்டு அமைச்சா் அரவிந்த லிம்பாவளி பேசியதாவது:
குடகு, சிக்மகளூா், ஹாசன், வடகன்னடம், சிவமொக்கா மாவட்டங்களில் வனப்பகுதியிலிருந்து ஊருக்குள் நுழையும் யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள், பயிா்களை சேதப்படுத்துவதோடு, பொதுமக்கள், கால்நடைகள் மீது தாக்குதல் நடத்துகின்றன. தாக்குதலில் சிலா் இறக்கவும் நேரிடுகிறது. காயமும் அடைகின்றனா். பயிா்கள் சேதமடைவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா்.
எனவே, வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதை தடுக்க வேண்டும். இதற்கான ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட சட்டப் பேரவைத் தொகுதிகளின் உறுப்பினா்கள் தெரிவித்தால், அதனை பரிசீலித்து அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். உறுப்பினா்களின் ஆலோசனைகளை முதல்வா் எடியூரப்பாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். விரைவில் இது தொடா்பாக மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவ்டேகரை சந்திக்கவும் முடிவு செய்துள்ளேன் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.