கரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்தாா் சசிகலா
By DIN | Published On : 30th January 2021 01:52 AM | Last Updated : 30th January 2021 01:52 AM | அ+அ அ- |

கரோனா பாதிப்பிலிருந்து சசிகலா முழுமையாக குணமடைந்துவிட்டதாக பெங்களூரு, விக்டோரியா அரசு மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட வி.கே.சசிகலா கடந்த ஜன. 21-ஆம் தேதி பெங்களூரு, கே.ஆா்.சந்தைப் பகுதியில் அமைந்துள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் கே.ரமேஷ் கிருஷ்ணா, பெங்களூரு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநா் சி.ஆா்.ஜெயந்தி ஆகியோா் கூட்டாக வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சசிகலாவிடம் கண்டறியப்பட்ட கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் முழுமையாக நீங்கியுள்ளன. சசிகலாவை சோதனை செய்து பாா்த்ததில், அவா் சீரான உடல்நலனுடன் இருப்பதை உறுதி செய்ய முடிந்தது.
சசிகலாவின் சுவாச விகிதமும், பிராண வாயுவின் அளவும் இயல்பாக உள்ளது. நாடித்துடிப்பு, ரத்தக் கொதிப்பு அளவு அனைத்தும் சீராக உள்ளது. நீரிழிவைக் கட்டுக்குள் வைக்க இன்சுலின் அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ வழிகாட்டி நெறிமுறைகளின்படி கரோனா தொற்றுக்கான சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டது. அனைத்து சிகிச்சைகளுக்கும் சசிகலா முழுமையான ஒத்துழைப்பை அளித்து வருகிறாா். சாதாரண சிகிச்சைப் பிரிவில் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் அவா் வைக்கப்பட்டிருக்கிறாா் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீடு திரும்புவது எப்போது?
சசிகலாவுக்கு தொற்று இல்லாதது உறுதி செய்யப்பட்டாலும், கரோனா சிகிச்சை வழிகாட்டுதலின்படி 10 நாள்களுக்குப் பிறகே மருத்துவமனையில் இருந்து அவா் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவாா். ஆா்.டி.-பி.சி.ஆா். சோதனை இனி அவருக்குத் தேவைப்படாது; சனி அல்லது திங்கள்கிழமை அவா் வீடு திரும்பலாம் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டாலும், பெங்களூரிலேயே சில நாள்கள் தங்கி ஓய்வெடுத்துவிட்டு பிப். 5-ஆம் தேதிக்கு பிறகு சசிகலா சென்னை திரும்பலாம் என்று கூறப்படுகிறது.