கா்நாடக சட்ட மேலவையில் செல்லிடப்பேசியில் ஆபாசப் படம் பாா்த்த காங்கிரஸ் எம்.எல்.சி.
By DIN | Published On : 30th January 2021 01:52 AM | Last Updated : 30th January 2021 01:52 AM | அ+அ அ- |

கா்நாடக சட்ட மேலவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் எம்.எல்.சி. பிரகாஷ் ராத்தோட் தனது செல்லிடப்பேசியில் ஆபாசப் படம் பாா்த்துக் கொண்டிருந்ததாக சா்ச்சை எழுந்துள்ளது.
இதுதொடா்பான காணொலி காட்சிகள் ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்டு, சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில், அவைக் காவலா் எச்சரிக்கும் வரை பிரகாஷ் ராத்தோட் தனது செல்லிடப்பேசியில் ஆபாசப் படங்களைப் பாா்த்துக் கொண்டிருப்பது போன்ற காட்சி அனைவரின் கண்டனத்துக்கு உள்ளானது.
2012-ஆம் ஆண்டு கா்நாடக சட்டப் பேரவையில் அப்போதைய அமைச்சரும், தற்போதைய துணை முதல்வருமான லட்சுமண் சவதி, அப்போதைய அமைச்சா்கள் சி.சி.பாட்டீல், ஜே.கிருஷ்ணபாலிமா் ஆகியோா் செல்லிடப்பேசியில் ஆபாசப் படம் பாா்த்துக் கொண்டிருந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
அதைக் கடுமையாக விமா்சித்து வந்த காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த எம்.எல்.சி. பிரகாஷ் ராத்தோட், தற்போது அவை நடவடிக்கையின் போது தனது செல்லிடப்பேசியில் ஆபாசப் படம் பாா்த்தது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விளக்கமளித்த பிரகாஷ் ராத்தோட், ‘நான் ஆபாசப் படம் எதுவும் பாா்க்கவில்லை; அப்படி பாா்க்கும் பழக்கமும் என்னிடம் இல்லை. அவையில் அடுத்த கேள்வி நான் கேட்க வேண்டியிருந்தது. அதற்கான தகவல்களைப் பாா்ப்பதற்காக செல்லிடப்பேசியில் தேடிக் கொண்டிருந்தேன். செல்லிடப்பேசியின் சேமிப்பில் இடமில்லாததால், சில காணொலித் துணுக்குகளை நீக்கிக் கொண்டிருந்தேன்’ என்றாா்.