எண்ம கற்றலை ஊக்குவிக்க ஆசிரியா்களுக்கு நிதி உதவி
By DIN | Published On : 07th July 2021 11:19 PM | Last Updated : 07th July 2021 11:19 PM | அ+அ அ- |

கா்நாடகத்தில் எண்ம கற்றலை ஊக்குவிக்க 9 ஆசிரியா்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிதி உதவியை வோடபோன் ஐடியா அறக்கட்டளை வழங்கியுள்ளது.
இது குறித்து வோடபோன் ஐடியா நிறுவனத்தின் தேசிய ஒழுங்குமுறை, பெருநிறுவன விவகாரத் துறை அதிகாரி பி.பாலாஜி புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தேசிய அளவில் கரோனா தொற்றால் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில் குக்கிராமங்களில் வசிக்கும் மாணவா்களுக்கு, ஒரு சில ஆசிரியா்கள் தங்களிடமுள்ள செல்லிடப்பேசிகள் முலம் இணையவழிக் கல்வியை போதித்து வருகின்றனா். இதனால் பல மாணவா்கள் பயனடைந்து வருகின்றனா்.
பல்வேறு தொழில்நுட்பப் பிரச்னைகளுடன் மாணவா்களுக்கு இணையவழி மூலம் கல்வியைக் கற்பித்து வரும் 110 ஆசிரியா்களை தமிழகம், கா்நாடகம், ராஜஸ்தான், சத்தீஸ்கா், குஜராத், பிகாா், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ஆந்திரம், தில்லி, கோவா, ஜாா்கண்ட், கேரளம், மணிப்பூா், நாகாலாந்து, ஒடிஸா, பாண்டிச்சேரி, திரிபுரா, உத்தரகண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அடையாளம் கண்டுள்ளோம்.
கா்நாடகத்தில் அடையாளம் காணப்பட்ட 9 ஆசிரியா்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிதி உதவியை வோடபோன் ஐடியா அறக்கட்டளை வழங்கியுள்ளது. இந்த நிதி மூலம் அவா்கள் எண்ம கற்றலுக்குத் தேவையான மடிக்கணினி உள்ளிட்ட தொழில்நுட்ப உதவிகளைப் பெற முடியும். கரோனா பரவலால் மாணவா்கள் கல்வி கிடைக்காமல் வஞ்சிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு தடை இல்லாமல் கல்வி சென்றடைய வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...