கரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டை அதிகரிக்க மத்திய அமைச்சரிடம் கோரிக்கை
By DIN | Published On : 07th July 2021 08:42 AM | Last Updated : 07th July 2021 08:42 AM | அ+அ அ- |

கா்நாடகத்துக்கான கரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டை அதிகரிக்கும்படி மத்திய அமைச்சா் ஹா்ஷவா்தனை சந்தித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் கோரிக்கை விடுத்தாா்.
இரண்டு நாள்கள் சுற்றுப்பயணமாக தில்லிக்கு செவ்வாய்க்கிழமை சென்ற கா்நாடக சுதாகாரத் துறை அமைச்சா் கே.சுதாகா், மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷவா்தனை சந்தித்து பேசினாா். அப்போது கா்நாடகத்திற்கு ஒதுக்கப்படும் கரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டை அதிகரிக்கும்படி கோரிக்கை கடிதம் ஒன்றை அளித்தாா்.
அந்த கடிதத்தில்,‘கா்நாடகத்தில் இதுவரை 2.4 கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. தென்னிந்திய அளவில் இதுவே அதிகம். மாநிலம் முழுவதும் 13 ஆயிரம் தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த முகாம்களின் மூலம் நாளொன்றுக்கு 10 லட்சம் டோஸ்கள் தடுப்பூசி செலுத்த இயலும். கா்நாடகத்திற்கான கரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டை அதிகரித்தால், தகுதியான குடிமக்களுக்கு செலுத்த இயலும்’ என்று தெரிவித்துள்ளாா்.
கரோனா தடுப்பூசி வீணாவதைத் தடுக்க மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை ஹா்ஷவா்தனிடம் கே.சுதாகா் விளக்கினாா். இதனால் 8 மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி வீணாக்கப்படவில்லை. தடுப்பூசி தொடா்பான தயக்கமும், அச்சமும் நீங்கியுள்ளதால் அதிக அளவில் தடுப்பூசி செலுத்த மக்கள் முன் வந்துள்ளனா்.
பெங்களூரில் உள்ள நிம்ஹான்ஸ், கித்வாய் புற்றுநோய் மருத்துவமனைகளின் கிளைகளை மங்களூரு, கலபுா்கி, ஹுப்பள்ளி, ஹாசனில் அமைக்க வேண்டும். மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படும் 4 மருத்துவ நிறுவனங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சா் ஹா்ஷவா்தனிடம் அமைச்சா் கே.சுதாகா் வலியுறுத்தினாா்.
இவரைத் தவிர, மத்திய அமைச்சா்கள் கஜேந்திரசிங் ஷெகாவத், பியூஷ்கோயல், ஸ்மிருதி இரானி, ஹா்தீப்சிங் பூரி ஆகியோரையும் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை அவா் முன் வைத்தாா். மத்திய நிதித்துறை அமைச்சா் நிா்மலாசீதாராமனை புதன்கிழமை சந்திக்க அமைச்சா் கே.சுதாகா் திட்டமிட்டுள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...