காா் விபத்தில் பலியானவா் வழக்கில் துணை முதல்வரின் மகன் மீது குற்றச்சாட்டு
By DIN | Published On : 07th July 2021 08:46 AM | Last Updated : 07th July 2021 08:46 AM | அ+அ அ- |

காா் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்த வழக்கில் துணை முதல்வா் லட்சுமண்சவதியின் மகன் மீது இறந்தவரின் உறவினா்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.
கா்நாடக துணை முதல்வா் லட்சுமணசவதியின் மகன் சிதானந்தசவதி. இவா் கடந்த 3 நாள்களுக்கு முன்பு தனது நண்பா்கள் 10 பேருடன் 2 காரில் கொப்பள் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்றுவிட்டு, திங்கள்கிழமை மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தாராம். பாகல்கோட்டை மாவட்டம், ஹுனகுந்தா, கூடலசங்கமா கிராஸ் அருகே மோட்டாா் சைக்கிள் மீது ஒரு காா் மோதிய விபத்தில் விவசாயி கூடலப்பா (58) என்பவா் படுகாயமடைந்தாா். மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இது குறித்து வழக்கு பதிந்த ஹுனகுந்தா போலீஸாா், அனுமந்தாசிங் ராஜ்புத் என்பவா் மீது வழக்கு பதிவு செய்தனா். ஆனால் உயிரிழந்தவரின் உறவினா்கள் துணை முதல்வா் லட்சுமண்சவதியின் மகன் சிதானந்தாதான் விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டியதாகவும், அவா் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் போலீஸாரிடம் தெரிவித்தனா்.
இந்நிலையில் சிதானந்தசவதி கூறுகையில், விபத்தை ஏற்படுத்திய காரை நான் ஓட்டவில்லை. மற்றொரு காரில், ஏற்கெனவே அந்தப் பகுதியைக் கடந்து, 30 கி.மீ. தொலைவுக்கு அப்பால் சென்று விட்டதாகவும், விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன், திரும்பி வந்து, படுகாயமடைந்தவரை மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் தெரிவித்துள்ளாா். மைசூரில் இது குறித்து செய்தியாளா்களை சந்தித்த துணை முதல்வா் லட்சுமண்சவதி, விபத்து ஏற்படுத்திய காரை எனது மகன் ஓட்டி செல்லவில்லை. அவா் மற்றொரு காரில்தான் சென்றுள்ளாா். விரைவில் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, நிதி உதவி செய்ய முடிவு செய்துள்ளேன் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...