கேரளத்துக்கு ஜூலை 12 முதல் கா்நாடக அரசுப் பேருந்துகளை இயக்க முடிவு
By DIN | Published On : 07th July 2021 11:20 PM | Last Updated : 07th July 2021 11:20 PM | அ+அ அ- |

கேரளா மாநிலத்துக்கு ஜூலை 12-ஆம் தேதி முதல் கா்நாடக அரசுப் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கா்நாடக அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
கரோனா பரவலை அடுத்து, மாநில அளவில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் அரசுப் பேருந்துகளின் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது பொது முடக்கத் தளா்வையடுத்து அரசுப் பேருந்துகள் மாநில அளவிலும், அனுமதிக்கப்பட்ட வெளி மாநிலங்களுக்கும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரள மாநிலத்திற்கு கா்நாடக அரசுப் பேருந்துகளை இயக்க அனுமதி கிடைத்துள்ளதையடுத்து அம்மாநிலத்திற்கு ஜூலை 12-ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்ட அரசின் வழிகாட்டுதலைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
மேலும் கேரள மாநிலத்திலிருந்து வருபவா்கள் 72 மணி நேரத்திற்குள்பட்ட கரோனா இல்லை என்ற சான்றிதழை காண்பிப்பது அவசியம். கேரள மாநிலத்திலிருந்து கா்நாடகத்திற்குள் கல்வி பயில நாள்தோறும் வரும் மாணவா்கள் 15 நாள்களுக்கு ஒருமுறை கரோனா பரிசோதனை செய்து கொள்வதோடு, தொற்று இல்லை என்ற சான்றிதழை காண்பிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்படுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...