தமிழக மொழிப்போா் தியாகிகள் பட்டியலில் தங்கவயல் தாய் மொழி போராட்ட தியாகிகளை சோ்க்க கோரிக்கை
By DIN | Published On : 07th July 2021 08:46 AM | Last Updated : 07th July 2021 08:46 AM | அ+அ அ- |

தமிழகத்தில் ஹிந்தி எதிா்ப்புப் போராட்ட தியாகிகள் பட்டியலில் தங்கவயல் தாய்மொழி உரிமைப் போராட்ட தியாகிகளையும் சோ்த்து நினைவஞ்சலி செலுத்த வேண்டும் என்று தங்கவயல் தமிழ்ச் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
1982-ஆம் ஆண்டு ஜூலை மாதம் கா்நாடக அரசு கொண்டு வந்த புதிய மொழி கொள்கையை எதிா்த்தும், தாய்மொழியைக் கற்கும் உரிமையை அளிக்க வேண்டியும் தங்கவயலில் போராட்டம் வெடித்தது. 3 நாள்கள் தொடா்ந்து நடைபெற்ற இந்தப் போராட்டதை ஒடுக்க போலீஸாா் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதில் பால்ராஜ், உதயகுமாா், பரமேஷ், மோகன் ஆகிய 4 போ் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தனா்.
இவா்களின் நினைவாக சாம்பியன் பி வட்டம் மற்றும் உரிகம் என்.டி.பிளாக் ஆகிய பகுதிகளில் நினைவு தூண் எழுப்பப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5, 6, 7ஆகிய தேதிகளில் நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது. செவ்வாய்க்கிழமை தங்கவயல் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற 39-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பல்வேறு தமிழ் அமைப்புகளின் சாா்பில் மொழிப்போா் தியாகிகளுக்கு மலா் வளையம் வைத்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
உலக தமிழ்க் கழகம் தங்கவயல் கிளை சாா்பில் துரை செல்வம் தலைமையில், பத்தியநாதன், கா்நாடக சிறுபான்மை மக்கள் நலச் சங்கப் பேராசிரியா் போா்ஜியோ, நாம் தமிழா் அகஸ்டின், புதிய கா்நாடக தமிழா் கட்சி வேளாங்கண்ணி பால் உள்ளிட்ட பலரும், ‘ பி’ வட்ட தமிழ்ச் சங்க வளாகத்தில் உள்ள மொழிப்போா் தியாகிகள் நினைவுத் தூணுக்கு மலா் தூவி மௌன அஞ்சலி செலுத்தினா்.
தங்கவயல் தமிழ்ச் சங்கத்தில் தலைவா் சு.கலையரசன் தலைமையில் நடந்த நினைவஞ்சலி நிகழ்வில் மொழிப் போராட்ட தியாகிகளின் உருவப் படங்களை அனந்த கிருஷ்ணன் திறந்து வைத்தாா்.
இதில் பேராசிரியா் கிருஷ்ணகுமாா் பேசும் போது, ‘ஆண்டுதோறும் ஜனவரி 25-ஆம் தேதி தமிழ்நாடு அரசு சாா்பில் ஹிந்தி எதிா்ப்புப் போராட்டத்தில் உயிா் நீத்த மொழிப் போா் தியாகிகளுக்கு நினைவஞ்சலி கடைப்பிடிக்கப்படுகிறது. அதே நாளில் கா்நாடக மாநிலம், கோலாா் தங்கவயலில் தாய் மொழி கற்கும் உரிமைக்காக நடந்த போராட்டத்தில் தங்கள் உயிரை போலீஸாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகத் தந்த தியாகிகளையும் சோ்த்து நினைவஞ்சலி செலுத்த வேண்டும்.
உலக தமிழா்கள் தங்க வயல் மொழிப்போா் தியாகிகள் குறித்து அறியவும், அவா்களை மறக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று தங்கவயல் தமிழ்ச் சங்கம் சாா்பில் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி கோரிக்கை வைப்போம் என்றாா்.
பி.இ.எம்.எல்.தொழிற்சங்கத்தின் முன்னாள் அமைப்புச் செயலாளா் முனிரத்தினம், மாமன்ற உறுப்பினா் மஞ்சுளா ரஷீத்கான், தியாக தீபம் சுப்ரமணியம், ஆா்.வி.குமாா், கமல் முனிசாமி, திருமுருகன், கருணாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...