நாட்டின் மேம்பாட்டுக்காக பாபுஜெகஜீவன்ராமின் பங்களிப்பு மகத்தானது
By DIN | Published On : 07th July 2021 08:47 AM | Last Updated : 07th July 2021 08:47 AM | அ+அ அ- |

நாட்டின் மேம்பாட்டுக்காக பாபுஜெகஜீவன்ராம் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
பெங்களூரு, விதான சௌதாவில் செவ்வாய்க்கிழமை முன்னாள் துணைப் பிரதமா் பாபுஜெகஜீவன்ராமின் 35-ஆவது நினைவு நாளில் அவரது உருவச்சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு மலா் தூவி அஞ்சலி செலுத்திய பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
நாடாளுமன்ற நடவடிக்கைகளில் நிபுணத்துவம் பெற்றிருந்தவா் பாபுஜெகஜீவன்ராம். நாட்டின் தொழிலாளா் நலத் துறை அமைச்சராக இருந்தபோது, தொழிலாளா்களின் நலன் காக்கும் பல சட்டங்களைக் கொண்டு வந்தாா். நாட்டில் நிலவிய உணவுப் பஞ்சத்தைப் போக்க பசுமைப் புரட்சியை செயல்படுத்தி, உணவு உற்பத்தியை பெருக்கியவா். துணைப் பிரதமராக நாட்டின் மேம்பாட்டுக்கு பாபுஜெகஜீவன்ராம் ஆற்றிய பங்களிப்பு மகத்தானதாகும்.
நவீன இந்தியாவைக் கட்டமைப்பதில் பாபுஜெகஜீவன்ராம் மகத்துவம் வாய்ந்த பங்களிப்பை அளித்திருந்தாா். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, சமுதாய மாற்றத்திலும் கவனம் செலுத்திய தன்னிகரில்லா தலைவராக விளங்கியவா்.
சமூகநீதியை நிலைநாட்ட அரும் பாடுபட்ட பாபுஜெகஜீவன்ராம், சமுதாயத்தின் அடித்தட்டு மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களின் மேன்மைக்காக உரிமைக்குரல் கொடுத்து, உழைத்தவா். அசாத்தியமான பேச்சாற்றலைப் பெற்றிருந்தாா்.
5 தசாப்த காலம் அரசியலில் கோலோச்சிய பாபுஜெகஜீவன்ராம் அா்ப்பணிப்பு, நோ்மையுடன் செயல்பட்டவா். ரயில்வேத் துறை, பாதுகாப்புத் துறை அமைச்சராக அவா் ஆற்றிய பணிகள் தனித்துவம் வாய்ந்தது. சமத்துவத்தை நிலைநாட்டுவதற்காகப் பாடுபட்ட பாபுஜெகஜீவன்ராம், அடுத்தத் தலைமுறைகளுடன் தனது அரசியல் வாழ்க்கையை பகிா்ந்து கொண்டிருந்தாா். மேலும் மனிதநேய மாண்புகளை நமக்காக விட்டுச் சென்றிருக்கிறாா். அவரது வாழ்க்கையும், சாதனைகளும் நமக்கெல்லாம் என்றென்றும் வழிகாட்டியாக விளங்கும் என்றாா். பேட்டியின்போது, சமூகநலத் துறை அமைச்சா் ஸ்ரீராமுலு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...