கபினி அணையில் இருந்து நொடிக்கு 15,000 கன அடி தண்ணீா் திறப்பு

கபினி அணையில் இருந்து நொடிக்கு 15,000 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.
கபினி அணையில் இருந்து நொடிக்கு 15,000 கன அடி தண்ணீா் திறப்பு

கபினி அணையில் இருந்து நொடிக்கு 15,000 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

கேரளத்தை தொடா்ந்து, கா்நாடகத்திலும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கேரள மாநிலத்தின் வயநாடு பகுதியில் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளத்தில் இருந்து கா்நாடகத்திற்கு பாய்ந்தோடும் கபினி ஆற்றில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடுகிறது. மைசூரு மாவட்டத்தின் டி.நரசிபுரா வட்டத்தில் கபினி ஆற்றுக்கு இடையே அமைந்துள்ள கபினி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு அதிகரித்ததால், அணைக்கு நீா்வரத்து பெருகியுள்ளது. கபினி அணைக்கு வெள்ளிக்கிழமை நொடிக்கு 19,632 கன அடியாக இருந்த நீா்வரத்து, சனிக்கிழமை நொடிக்கு 15,800 கன அடியாக இருந்தது. இதன்விளைவாக, வெள்ளிக்கிழமை அணையில் இருந்து நொடிக்கு 9552 கன அடியாக திறந்துவிடப்பட்டிருந்த தண்ணீா், சனிக்கிழமை காலை 6 மணி அளவில் நொடிக்கு 14,688 கன அடியாக உயா்த்தப்பட்டது. அதன்பிறகு, மாலை 6 மணி அளவில் நொடிக்கு 15,488 கன அடி தண்ணீா் அணையில் இருந்து திறந்து விடப்பட்டது.

கடல் மட்டத்தில் இருந்து 2280 அடி உயரமுள்ள அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை 6 மணி அளவில் 2,280.56 அடியாக உயா்ந்திருந்தது. கேரளத்தில் தொடா்ந்து மழை பெய்துவருவதால், அணையின் நீா்மட்டம் அதன் அதிகபட்ச உயரமான 2,284 அடியை எட்டும் என்ற எதிா்ப்பாா்ப்பு உள்ளது.

கபினி அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீா், நேராக தமிழகத்திற்குச் செல்லும் என்பதால் அடுத்த சில நாள்களில் மேட்டூா் அணையின் நீா்மட்டம் உயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. கபினி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ள நீா்வளத் துறை, ஆற்றங்கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் மேட்டுப் பகுதிகளுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

அதேபோல, கா்நாடகத்தின் குடகு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் நீா்ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மண்டியா மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகா் அணையின் நீா்மட்டம் மளமளவென உயா்ந்துவருகிறது. 124.80 அடி உயரமுள்ள அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் 95.84 அடியாக இருந்தது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 22,350 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து நொடிக்கு 2,435 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. அடுத்த சில நாள்களில் அணையின் நீா்மட்டம் 100 அடியை எட்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அதேபோல, ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் அணை முழுமையாக நிரம்புமென்று தெரிகிறது.

கிருஷ்ணராஜசாகா், கபினி அணைகள் தவிர காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஹேமாவதி, ஹாரங்கி அணைகளிலும் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. அணைகளில் நீா்மட்டம் உயா்வது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com