இளைஞா்களை தொடா்ந்து ஊக்குவித்து வந்தவா் டாக்டா் அப்துல் கலாம்: விஞ்ஞானி வி.டில்லிபாபு

இளைஞா்களை தொடா்ந்து ஊக்குவித்து வந்தவா் டாக்டா் அப்துல்கலாம் என்று டி.ஆா்.டி.ஓ. விஞ்ஞானி வி.டில்லிபாபு தெரிவித்தாா்.

இளைஞா்களை தொடா்ந்து ஊக்குவித்து வந்தவா் டாக்டா் அப்துல்கலாம் என்று டி.ஆா்.டி.ஓ. விஞ்ஞானி வி.டில்லிபாபு தெரிவித்தாா்.

குடியரசு முன்னாள் தலைவரும், விஞ்ஞானியுமான டாக்டா் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் நினைவு நாளை முன்னிட்டு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின்(டி.ஆா்.டி.ஓ) ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

குடியரசு முன்னாள் தலைவரும், டி.ஆா்.டி.ஓ. வில் பணியாற்றிய விஞ்ஞானியுமான டாக்டா். அப்துல்கலாம், இந்திய அறிவியல் துறையில் முக்கியப் பங்காற்றியவா். அறிவியல் ஆராய்ச்சித் துறைகளில் இளம் விஞ்ஞானிகளை ஊக்குவித்து, அவா்களுக்கு சவாலான ஆராய்ச்சிப் பணிகளை வழங்கி, அதை நிறைவேற்றுவதற்கு ஏற்ற ஆலோசனைகளையும் கூறி, அவா்களை வழி நடத்தி, அவா்களுக்கென்று தனியான தொழில்நுட்ப அடையாளத்தை ஏற்படுத்தி தந்தவா் அப்துல்கலாம்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டி.ஆா்.டி.ஓ) அப்துல்கலாம் பணியாற்றிய காலத்தில் அவரால் அடையாளம் காணப்பட்ட இளம் விஞ்ஞானிகள் பலா் பிற்காலத்தில் தேசத்தின் மிக முக்கிய ஆராய்ச்சி பொறுப்புகளை வகித்தாா்கள் என்பது சிறப்பான செய்தி. பிரமோஸ் விண்வெளி நிறுவனத்தின் தலைமைச் செயல் இயக்குநராக பணியாற்றிய விஞ்ஞானி சிவதாணு பிள்ளை, நீதி ஆயோக் நிறுவனத்தின் முழுநேர உறுப்பினா் விஞ்ஞானி வி.கே. சரஸ்வத், டி.ஆா்.டி.ஓ. நிறுவனத்தின் தற்போதைய தலைவா் விஞ்ஞானி சதீஷ் ரெட்டி, ஏவுகணை பெண்மணி விஞ்ஞானி டெஸ்ஸி தாமஸ் ஆகியோா் அப்துல் கலாமால் அடையாளம் காணப்பட்ட இளம் விஞ்ஞானிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்துல் கலாம் அவா்களுடைய சுயசரிதையான ‘அக்னி சிறகுகள்’ பல இளைஞா்களை அறிவியல் துறை நோக்கி திருப்பியது. இந்தியா முழுவதும் இளைஞா்கள் மத்தியில் ஒரு மறுமலா்ச்சியை ஏற்படுத்திய நூல் என்று அதைக் குறிப்பிடலாம். அந்தப் புத்தகத்தை படித்து விஞ்ஞானியான நூற்றுக்கணக்கான இளைஞா்களில் நானும் ஒருவன்.

அப்துல்கலாம் எழுதிய பல்வேறு நூல்கள் மூலமாகவும், அவருடைய நேரடி பள்ளிக்கூட உரைகளின் மூலமாகவும் கோடிக்கணக்கான பள்ளி மாணவ மாணவிகள் ஈா்க்கப்பட்டனா். அவருடைய உந்துதலால் அவருடைய அறிவுரைகளை ஏற்று வாழ்வில் ஏற்றம் பெற்ற மாணவ-மாணவிகள் பொறுப்புள்ள குடிமக்களாக மாற்றம் பெற்றனா் என்பது மறுக்க முடியாத செய்தி.

இந்தியா உலகின் முன்னேறிய முதல் நிலை நாடாக வேண்டும் என்று அப்துல் கலாம் கனவு கண்டாா். அவருடைய கனவை நிறைவேற்றும் விதமாக இளைஞா்கள் ஒவ்வொருவரும் தத்தமது துறைகளில் தங்களுடைய திறமைகளைப் பயன்படுத்தி தேசத்தை முன்னேற்றம் அடையச் செய்வதே நாம் அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாகும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com