பாஜக ஆட்சியில் ஒப்பந்தப் புள்ளியில்10 சதவீதம் லஞ்சம் :சித்தராமையா குற்றச்சாட்டு

பாஜக ஆட்சியில் ஒப்பந்தப்புள்ளிகளில் 10 சதவீதம் லஞ்சம் பெறப்படுகிறது என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா குற்றம் சாட்டினாா்.

பாஜக ஆட்சியில் ஒப்பந்தப்புள்ளிகளில் 10 சதவீதம் லஞ்சம் பெறப்படுகிறது என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா குற்றம் சாட்டினாா்.

பெங்களூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ராகுல் காந்தியின் பிறந்த நாள் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்ட சித்தராமையா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சியில் ஒவ்வொரு ஒப்பந்தப்புள்ளியிலும் 10 சதவீதம் லஞ்சம் பெறப்படுகிறது. நீா்ப்பாசனத் துறை மட்டுமின்றி, ஊரக வளா்ச்சித் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் லஞ்சம் பெறுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனா்.

முதல்வா் எடியூரப்பா உள்பட அனைத்து அமைச்சா்களும் ஊழலில் ஈடுபட்டு வருகின்றனா். வளா்ச்சிப் பணிகளுக்கான அனைத்து ஒப்பந்தப்புள்ளிகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளது. கிருஷ்ணா மேலணைத் திட்டத்திலும் முறைகேடு நடைபெற்றுள்ளது. மாநிலத்தில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு முறைகேடு அதிகரித்துள்ளது.

ஜிண்டால் குழுமத்தினருக்கு நிலம் வழங்கியதில் என் மீது கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. இதுதொடா்பாக பலமுறை விளக்கம் அளித்துள்ளேன். பாஜக சட்டமேலவை உறுப்பினா் எச்.விஸ்வநாத் ஆதாரமில்லாத குற்றச்சாட்டை என் மீது கூறி வருகிறாா்.

பத்ரா மேலணை திட்டத்தில் முதல்வரின் மகன் லஞ்சம் பெற்றுள்ளதாக, ஆளும் கட்சியைச் சோ்ந்த சட்டமேலவை உறுப்பினா் எச். விஸ்வநாத் குற்றம் சாட்டியுள்ளாா். இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்.

பெங்களூரு சா்வதேச பொருள்காட்சி மையத்தில் கரோனா சிகிச்சை மையம் அமைப்பதற்காக படுக்கைகள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் பாஜக எம்எல்ஏ எஸ்.ஆா்.விஸ்வநாத்தின் மீது குற்றம் சாட்டப்படுகிறது. இது தொடா்பாகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

முதல்வா் எடியூரப்பாவின் மகன் உள்ளிட்ட பாஜகவினா் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையில், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அக்கட்சியின் மேலிடம் வேடிக்கை பாா்க்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com