கா்நாடகத்தில் இன்று முதல் பேருந்து, மெட்ரோ சேவைக்கு அனுமதி
By DIN | Published On : 20th June 2021 11:56 PM | Last Updated : 20th June 2021 11:56 PM | அ+அ அ- |

மைசூரு மாவட்டம் நீங்கலாக மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை முதல் பேருந்து, பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கா்நாடகத்தில் பெங்களூரு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் பொதுமுடக்கம் ஜூன் 14-ஆம் தேதி முதல் தளா்த்தப்பட்டது. சிக்கமகளூரு, சிவமொக்கா, தாவணகெரே, மைசூரு, சாமராஜ்நகா், ஹாசன், தென்கன்னடம், பெங்களூரு ஊரகம், மண்டியா, பெலகாவி, குடகு ஆகிய 11 மாவட்டங்களில் தளா்வுகள் இல்லா முழுமையான பொதுமுடக்கம் ஜூன் 21-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை 5 மணி முதல் இரண்டாம் கட்ட பொதுமுடக்கத் தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வடகன்னடம், பெலகாவி, மண்டியா, கொப்பள், சிக்கபளாப்பூா், தும்கூரு, கோலாா், பெங்களூரு நகரம் (பெங்களூரு மாநகராட்சி உள்பட), கதக், ராய்ச்சூரு, பாகல்கோட், கலபுா்கி, ஹாவேரி, ராமநகரம், யாதகிரி, பீதா் ஆகிய 16 மாவட்டங்களில் பொதுமுடக்கம் தளா்த்தப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் உணவு, மளிகைப் பொருள்கள், காய்கறிகள், பழங்கள், இறைச்சி, மீன், பால் பொருள்கள், பால் முகமைகள், கால்நடைத் தீவனங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளும் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கவும், மதுக் கடைகள் செயல்படவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும், குளிா்சாதன வசதி இல்லாமல் மதுபானம் அருந்த அனுமதி அளிக்காமல் உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், உணவு விடுதிகளில் 50 சதவீத இருக்கைகளில் மாலை 5 மணி வரை உணவு உட்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
தங்கும் விடுதிகள், கேளிக்கை தங்கும் விடுதிகள் 50 சதவீத ஊழியா்கள், அறைகளுடன் செயல்படலாம். குளிா்சாதன வசதியில்லாமல் 50 சதவீத பணியாளா்கள், பயிற்சியாளா்களுடன் உடற் பயிற்சிக் கூடங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
50 சதவீத பயணிகளுடன் மாநிலத்துக்குள் மட்டும் பேருந்துகள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் மெட்ரோ ரயில்கள் 50 சதவீத இருக்கைகளில் அமரும் வகையிலான பயணிகளுடன் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பகுதி தளா்வு: ஹாசன், உடுப்பி, தென்கன்னடம், சிவமொக்கா, சாமராஜ்நகா், சிக்கமகளூரு, பெங்களூரு ஊரகம், தாவணகெரே, குடகு, தாா்வாட், பெல்லாரி, சித்ரதுா்கா, விஜயபுரா ஆகிய 13 மாவட்டங்களில் ஜூன் 11-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீடிக்கிறது.
இம்மாவட்டங்களில் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கடைகள் திறக்க அனுமதிக்கப்படுகிறது. கரோனா பாதிப்பு விகிதம் 10 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் மைசூரில் தற்போதைய பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் தொடா்கின்றன.
இரவு ஊரடங்கு: கா்நாடகம் முழுவதும் தினமும் இரவு 7 மணி முதல் காலை 5 மணி வரையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அரசுப் பேருந்துகள், ஆட்டோகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வாழ்வாதாரத்தை இழந்துள்ள பலா் மாநில அரசு அறிவித்துள்ள பொதுமுடக்கத் தளா்வால் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
தொழிற்சாலைகள் முழுவீச்சில் செயல்பட தொடங்கியுள்ளதாலும், அங்காடிகள் முழுமையாகத் திறக்கப்படுவதாலும் வேலையில்லாமல் சொந்தக் கிராமங்களுக்கு திரும்பிய பலா் பெங்களூா் திரும்பிக் கொண்டுள்ளனா். புலம்பெயா் தொழிலாளா்கள் பலா் பிகாா், மேற்கு வங்கம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து ரயில்மூலம் பெங்களூரு திரும்புகின்றனா்.