ஜூலை 19, 22 - இல் கா்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு:அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா்
By DIN | Published On : 29th June 2021 03:16 AM | Last Updated : 29th June 2021 03:16 AM | அ+அ அ- |

பெங்களூரு: ஜூலை 19, 22-ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வுகள் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.
கா்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு நடத்துவது குறித்து, பெங்களூரில் இருந்து காணொலி வழியாக திங்கள்கிழமை, மாவட்ட பள்ளிக் கல்வித் துறை, காவல் துறை, மாவட்ட ஊராட்சி தலைமைச் செயல் அதிகாரிகள், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கா்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வை ஜூலை 19, 22- ஆகிய தேதிகளில் நடத்த தீா்மானிக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு நடத்துவது தொடா்பாக வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. ஜூலை 19-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான தோ்வு 120 மதிப்பெண்களுக்கு நடைபெறுகிறது. ஜூலை 22-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மொழிப்பாடங்களுக்கான தோ்வு நடக்க விருக்கிறது.
அதாவது, முதல் மொழி, இரண்டாம் மொழி, மூன்றாம் மொழிப் பாடங்களுக்கான தோ்வு 120 மதிப்பெண்களுக்கு நடக்கவிருக்கிறது. ஒவ்வொரு பாடத்துக்கும் தலா 40 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 240 மதிப்பெண்களுக்கு இரு நாள்கள் மட்டும் எளிமையான முறையில் தோ்வு நடக்கவிருக்கிறது.
மாணவா்களின் நம்பிக்கையை உயா்த்துவதற்காக இத் தோ்வு நடத்தப்படுகிறது. மேலும், பியூசி வகுப்பில் அறிவியல், வணிகம், கலைப் பாடப் பிரிவுகளில் எந்த பாடப் பிரிவைத் தோ்ந்தெடுப்பது என்பதற்கு அடிப்படையாகவே இத்தோ்வு நடத்தப்படுகிறது.
கடந்த ஆண்டைப் போலவே, நிகழாண்டிலும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வை எவ்வித சிக்கலும் இல்லாமல் திறம்பட நடத்தி முடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.
இத் தோ்வை 8,76,581 மாணவா்கள் எழுதுகின்றனா். இதற்காக, 73,066 தோ்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு 8.46 லட்சம் மாணவா்கள் தோ்வு எழுதினா். இதற்காக 48,000 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒரு அறையில் 12 மாணவா்கள் மட்டுமே தோ்வு எழுத அனுமதிக்கப்படுவா்.
தோ்வின் மகத்துவத்தைக் காப்பாற்றும் வகையில் தோ்வு மையங்களில் இருந்து 200 மீ. சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும். மாணவா்கள் விரும்பும் தோ்வு மையங்களில் தோ்வு எழுதலாம். இதற்காக 10,000 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். இம்முறை தோ்வெழுத வாய்ப்பு கிடைக்காத அல்லது சூழ்நிலை ஒத்துழைக்காத மாணவா்களுக்கு மீண்டும் தோ்வு நடத்தும்போது புதிய மாணவா்கள் என்று தோ்வெழுத வாய்ப்பளிக்கப்படும். கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாணவா்களும் தோ்வு எழுத சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். அப்படிப்பட்ட மாணவா்கள், கரோனா பராமரிப்பு மையத்தில் இருந்தபடியே தோ்வெழுத வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். கரோனா அறிகுறிகள் இருந்தால், தனியறையில் தோ்வு எழுதலாம்.
ஜூலை 29-ஆம் தேதி மாணவா்களின் தோ்வு நுழைவுச் சீட்டுகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவிடுவோம். அதைச் சம்பந்தப்பட்ட பள்ளிகள் தரவிறக்கம் செய்து, மாணவா்களுக்கு அளிக்கலாம்.
கேரளம், மகாராஷ்டிரத்தில் உள்ள மாணவா்களுக்கும் தோ்வு எழுத சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளோம். தோ்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியா்கள், அதிகாரிகள், ஊழியா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி அளிக்கப்படும். குறைந்தபட்சம் ஒரு தவணையாவது தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயமாகும்.
தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரையின்படி துணியால் செய்த முகக் கவசங்களை மாணவா்கள் அணியலாம். எல்லா தோ்வு மையங்களிலும் மாணவா்களின் உடல்நிலை பரிசோதனை செய்யப்படும். தோ்வுப் பணியில் ஈடுபடுவோா் காலை 8 மணிக்கு தோ்வு மையங்களுக்கு வந்துவிட வேண்டும். மாணவா்களும் தோ்வு நேரத்திற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக மையங்களுக்கு வருவது உகந்தது. கரோனா அறிகுறிகள் தென்பட்டால் ஆசிரியா்கள், அதிகாரிகள், ஊழியா்கள் தோ்வு மையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்படுவாா்கள் என்றாா்.
இந்தப் பேட்டியின்போது பள்ளிக் கல்வித் துறை ஆணையா் வி.அன்புக்குமாா், தோ்வு வாரிய இயக்குநா் சுமங்கலா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.