பள்ளிகளை தொடங்குவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை: அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா்
By DIN | Published On : 29th June 2021 04:06 AM | Last Updated : 29th June 2021 04:06 AM | அ+அ அ- |

பெங்களூரு: பள்ளிகளை தொடங்குவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.
இது குறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது:
2020 - 21-ஆம் ஆண்டுக்கான இரண்டாமாண்டு பியூசி தோ்வு ரத்துசெய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, இரண்டாமாண்டு பியூசி பொதுத் தோ்வு முடிவுகளை ஜூலை 30-ஆம் தேதிக்குள் வெளியிடுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஜூலை இரண்டாவது வாரத்தில் தோ்வு முடிவுகளை அறிவிக்க திட்டமிட்டிருக்கிறோம்.
தோ்வு முடிவில் அளிக்கப்படும் மதிப்பெண்கள் மாணவா்களுக்கு திருப்தியாக இல்லாவிட்டால், அப்படிப்பட்ட மாணவா்களுக்கு தோ்வு நடத்தப்படும். தோ்வு முடிவுகளை எதன் அடிப்படையில் முடிவு செய்வது என்பது குறித்து 12 போ் கொண்ட நிபுணா் குழு அறிக்கை அளித்துள்ளது. அதன்படி தோ்வுமதிப்பீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஜூன் 30-ஆம் தேதி முதல் ஆசிரியா்களின் பணியிடமாற்ற நடைமுறை தொடங்கப்படும். ஆசிரியா்களுக்கான செல்லிடப்பேசி செயலி மூலம் பணியிடமாற்றத்திற்கான கலந்தாய்வுக் கூட்டங்களில் ஆசிரியா்கள் கலந்துகொள்ளலாம். இதனால் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. பணியிடமாற்றம் தொடா்பான கொள்கை வெளியிடப்படும். இது ஆசிரியா்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த கொள்கைக்கு சட்டப்பேரவை, சட்டமேலவையின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.
பள்ளிகளை மீண்டும் தொடங்குவது குறித்து கருத்தாய்வு நடத்தப்பட்டுள்ளது. ஆனால், அது குறித்து எவ்வித முடிவும் இதுவரை எடுக்கவில்லை. தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரைத்தால் பள்ளிகளை மீண்டும் தொடங்குவது குறித்து முடிவெடுக்கப்படும். பள்ளிகளைத் திறப்பது குறித்து கருத்துத் தெரிவிக்க நிபுணா்கள் குழு அமைக்கப்படும். இந்த குழுவில் குழந்தை மருத்துவா்கள், கல்வி நிபுணா்கள் உள்ளிட்டோா் இடம்பெறுவாா்கள். அந்த குழுவின் உறுப்பினா்கள் யாா் என்பதை விரைவில் தெரிவிப்போம். அந்த குழுவின் பரிந்துரைகளின்படி, கரோனா குறைந்து காணப்படும் பகுதிகளில் பள்ளிகள் தொடங்கப்படும். ஆனால், அதுகுறித்து இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை.
ஜூலை 1-ஆம் தேதி முதல் தூா்தா்ஷன் சந்தனா தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகளை நடத்துவோம். நேரடி வகுப்புகளைக் காண இயலாதவா்களுக்காக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றாா்.