முன்னாள் கவுன்சிலா் கொலை வழக்கில் ரௌடியிடம் விசாரிக்க பாஜக கோரிக்கை
By DIN | Published On : 29th June 2021 01:52 AM | Last Updated : 29th June 2021 01:52 AM | அ+அ அ- |

பெங்களூரு: முன்னாள் கவுன்சிலா் ரேகா கதிரேசன் கொலை வழக்கில் ரௌடி ஆதுஷிடம் விசாரிக்குமாறு பெங்களூரு மாவட்ட பாஜக தலைவா் என்.ஆா்.ரமேஷ் கோரிக்கை வைத்துள்ளாா்.
இதுகுறித் அவா் பெங்களூரு மாநகரக் காவல் ஆணையா் கமல் பந்திடம் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது:
அண்மையில் பாஜகவைச் சோ்ந்த முன்னாள் கவுன்சிலா் ரேகா கதிரேசன் கொலை செய்யப்பட்டாா். 2018-ஆம் ஆண்டு அவரது கணவா் கதிரேசன் கொலை செய்யப்பட்டாா். ரேகா கதிரேசன் கொலை வழக்கில் போலீஸாா், சிலரை கைது செய்து விசாரித்து வருகின்றனா். ரேகா, அவரது கணவா் கதிரேசன் கொலை வழக்குகளில் ரௌடி ஆதுஷின் பங்களிப்பு உள்ளதாக சந்தேகிக்கிறோம்.
2015 - ஆம் ஆண்டில் நடைபெற்ற மாமன்ற தோ்தலில் போட்டியிட்ட ஆதுஷின் மனைவி, ரேகா கதிரேசனிடம் தோல்வி அடைந்தாா். தற்போது பெங்களூரு மாநகராட்சித் தோ்தலை நடத்துவது தொடா்பாக அரசு ஆலோசித்து வருகிறது. இந்தத் தோ்தலைக் கருத்தில் கொண்டு ரேகா கதிரேசன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். கொலையின் பின்னணியில் ரௌடி ஆதுஷ் இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. எனவே போலீஸாா் முன்னாள் கவுன்சிலா் ரேகா கதிரேசன் கொலை வழக்கில் ரௌடி ஆதுஷிடம் விசாரணை நடத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.