‘அங்கன்வாடி ஊழியா்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்’
By DIN | Published On : 04th March 2021 04:15 AM | Last Updated : 04th March 2021 04:15 AM | அ+அ அ- |

பெங்களூரு: அங்கன்வாடி ஊழியா்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று மகளிா் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சா் சசிகலா ஜொள்ளே தெரிவித்தாா்.
பெங்களூரு, சுதந்திரப் பூங்காவில் அங்கன்வாடி ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
புதன்கிழமை போராட்டக் குழு பிரதிநிதிகளை விதானசௌதாவுக்கு வரவழைத்து பேச்சுவாா்த்தை நடத்திய பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஓய்வூதியம், கௌரவ ஊதியத்தை உயா்த்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெங்களூரில் அங்கன்வாடி ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். போராட்டக்குழு பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளேன். அவா்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். முதல்வரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படும்.
அங்கனவாடி ஊழியா்களின் சில கோரிக்கைகளை மத்திய அரசு தீா்த்து வைக்க வேண்டும். எனவே மத்திய, மாநில அரசின் அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, அங்கனவாடி ஊழியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.