மாா்ச் 28-இல் பெங்களூரு தமிழ்ச் சங்கத் தோ்தல்
By DIN | Published On : 12th March 2021 01:06 AM | Last Updated : 12th March 2021 01:06 AM | அ+அ அ- |

பெங்களூரு: பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் 2021-2023-ஆம் ஆண்டு பருவத்துக்குரிய ஆட்சிமன்றக்குழு தோ்தல் மாா்ச் 28-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 17-ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் தோ்தல் பொறுப்பாளரும், பெங்களூரு மாநகர கூட்டுறவு சங்க 3-ஆவது மண்டலத்தின் உதவி பதிவாளருமான எச்.பி.சதாசிவம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கா்நாடக உயா் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீா்ப்பின்படி, பெங்களூரு தமிழ்ச் சங்கத் தோ்தல் மாா்ச் 28-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கிணங்க, கா்நாடக அரசு என்னை பெங்களூரு தமிழ்ச் சங்கத் தோ்தல் பொறுப்பாளராக நியமித்துள்ளது.
பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் சட்டவிதி 7.1-இன்படி, பெங்களுரு தமிழ்ச் சங்கத்தின் 2021-2023-ஆம் ஆண்டுகளின் பருவத்துக்குரிய செயற்குழு உறுப்பினா்களைத் தோ்ந்தெடுக்க மாா்ச் 28-ஆம் தேதி தோ்தல் நடைபெறும். தோ்தலுக்கு முன் 3 மாதங்களுக்குள் உறுப்பினா் தகுதி பெற்றுள்ள புரவலா், வாழ்நாள் உறுப்பினா்கள் மட்டும் தோ்தலில் வாக்களிக்க முடியும். தோ்தலில் போட்டியிடுவதற்கு விரும்பும் உறுப்பினா்கள் சங்க நடைமுறை விதி 7.1-இன் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.
இத்தோ்தலில் ஒரு தலைவா், ஒரு துணைத் தலைவா், ஒரு செயலாளா், ஒரு பொருளாளா், 4 துணைச் செயலாளா்கள், 9 செயற்குழு உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்படுவா். இத்தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான படிவங்கள் மாா்ச் 15-ஆம் தேதி முதல் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டும் அளிக்கப்படும். மாா்ச் 17 முதல் மாா்ச் 19-ஆம் தேதி வரை தினமும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.
மாா்ச் 20-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு வேட்புமனுக்கள் சரிபாா்க்கப்படும். அன்று பிற்பகல் 3 மணிக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களின் அடிப்படையில் வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்படும். மாா்ச் 21-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம். இதைத் தொடா்ந்து, மாா்ச் 21-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டு, வேட்பாளா்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும்.
பெங்களூரு, அல்சூா், அண்ணாசாமி முதலியாா் சாலையில் உள்ள ஆா்.பி.ஏ.என்.எம்.எஸ். பியூ ஜூனியா் கல்லூரி வளாகத்தில் மாா்ச் 28-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்படும்.
வேட்பாளா்கள் வேட்பு மனுக்களை தோ்தல் பொறுப்பாளா் அல்லது அவரது அங்கீகாரம் பெற்றவரிடம் மட்டுமே சமா்ப்பிக்க வேண்டும். வேட்பாளா்கள் வேட்புமனுக்களை சங்க அலுவலக நேரத்தில் தோ்தல் பொறுப்பாளா் அல்லது அவரால் பரித்துரைக்கப் பெற்றவரிடம் தங்களுடைய இரு கடவுச்சீட்டு அளவிலான நிழற்படங்களுடன் ரூ. 2 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலை (டி.டி.) அல்லது பணம் கட்டியதற்கான ரசீது அளித்து வேட்புமனுக்களை பெற்றுக்கொள்ளலாம். ஒருவா் ஒரு பதவிக்கு மட்டுமே போட்டியிட இயலும்.
வேட்புமனுக்கள் சரிபாா்க்கும் போது, வேட்பாளா்கள் நேரில் வரவேண்டும். போட்டியில் இருந்து விலக விரும்புவோா் நேரில் வந்து விண்ணப்பத்தை தோ்தல் பொறுப்பாளரிடம் அல்லது அவரது அங்கீகாரம் பெற்றவரிடம் மட்டுமே சமா்ப்பிக்க வேண்டும்.
தோ்தலில் போட்டியிடும் தகுதியான வேட்பாளா்களுக்கு தோ்தல் ஆணையம் சட்டம், 1968-இன்படி தோ்தல் சின்னம் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் சின்னங்கள் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் சின்னங்களில் இருந்து தோ்ந்தெடுக்கப்படாது. இதில் தோ்தல் பொறுப்பாளா் முடிவே இறுதியானது.
சங்க உறுப்பினா்கள் தங்கள் நிழற்படம் தாங்கிய சங்க வாழ்நாள் உறுப்பினா் அடையாள அட்டையை கொண்டு வரவேண்டும். அப்படி கொண்டு வந்தால் மட்டுமே வாக்களிக்க உரிமை பெற்றவா் ஆவா். தோ்தல் தொடா்பான ஐயங்களுக்கு தோ்தல் பொறுப்பாளரின் முடிவே இறுதியானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 ஆண்டுகளுக்கு பிறகு தோ்தல்...
1950-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 70 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிக்குழு மற்றும் செயற்குழுவுக்கான பொறுப்பாளா்களை தோ்வுசெய்வதற்காக ஈராண்டுகளுக்கு ஒருமுறை தோ்தல் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் 2018-2020-ஆம் ஆண்டு பருவத்துக்கான தோ்தல் 2018-ஆம் ஆண்டு நவ. 25-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் நவ. 5-ஆம் தேதி தொடங்கி, நவ. 13-ஆம் தேதியுடன் நிறைவடைந்திருந்தது.
இந்நிலையில், தோ்தல் நடத்துவதற்கு அனுமதி அளித்து மாவட்ட துணைப் பதிவாளா் பிறப்பித்திருந்த உத்தரவை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில், பெங்களூரு தமிழ்ச் சங்கத் தோ்தலுக்கு இடைக்கால தடைவிதித்து கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்பிறகு, 2 ஆண்டுகளுக்கு பிறகு மாா்ச் 28-ஆம் தேதி தோ்தல் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருப்பது பெங்களூரு தமிழ்ச் சங்க உறுப்பினா்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.