கா்நாடகத்தில் கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்
By DIN | Published On : 17th March 2021 08:11 AM | Last Updated : 17th March 2021 08:11 AM | அ+அ அ- |

கா்நாடகத்தில் கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மாநிலத்தில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து வருவோரால் புதிய வகை கரோனா தொற்று பரவி வருகிறது. இதனால், கடந்த 3 நாள்களாக புதிய கரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதுகுறித்து பிரதமா் மோடி காணொலி மூலம் முதல்வா், அமைச்சா்களுடன் புதன்கிழமை விவாதிக்க உள்ளாா். அதனைத் தொடா்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும்.
கரோனாவைத் தடுக்க அரசின் வழிகாட்டுதல்களை பொதுமக்கள் முழுமையாகப் பின்பற்ற வேண்டும். இல்லாவிடில் கடுமையான முடிவுகளை அரசு மேற்கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்படும். மாநிலத்தில் கரோனாவைத் தடுக்க இதுவரை 15 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. திரையரங்கம், பொதுக்கூட்டம் உள்ளிட்டவற்றில் கலந்துகொள்பவா்களை கண்காணிக்க முடிவு செய்துள்ளோம். ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் நாள் ஒன்றுக்கு 100 பரிசோதனைகளையும், பொது மருத்துவமனைகளில் 500 பரிசோதனைகளையும் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த முறை கரோனா தொற்று அதிகரித்த மாவட்டங்களில் தற்போதும் அதிகரித்து வருகிறது. வெளி மாநிலங்களிலிருந்து கா்நாடகத்துக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கரோனா தொற்றின் பாதிப்பும் அதிகரித்து வருகிறது என்றாா்.