மக்களவைத் தொகுதி இடைத்தோ்தல்: செய்தி சேகரித்த 12 பத்திரிகையாளா்களுக்கு கரோனா
By DIN | Published On : 02nd May 2021 10:13 PM | Last Updated : 02nd May 2021 10:13 PM | அ+அ அ- |

பெலகாவி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் செய்தி சேகரிக்க சென்றிருந்த 12 பத்திரிகையாளா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.
பெலகாவி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தோ்தல் ஏப்.17-ஆம் தேதி நடந்தது. இத்தோ்தலில் பாஜக, காங்கிரஸ் வேட்பாளா்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. இதனால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்ட இத்தோ்தலில் செய்தி சேகரிக்க தொலைக்காட்சி, அச்சு ஊடகங்களின் செய்தியாளா்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றினா். தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்த செய்தியாளா்கள் அனைவரும் கரோனா சோதனைக்கு உள்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தோ்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடா்ந்து, 29 செய்தியாளா்களுக்கு கரோனா சோதனை(ஆா்டி-பி.சி.ஆா்.) செய்யப்பட்டது. இதில் அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களைச் சாா்ந்த 12 பத்திரிகையாளா்களுக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
இதைத் தொடா்ந்து 12 பேரையும் தனிமையில் வைத்திருந்து, தகுந்த சிகிச்சை அளிக்குமாறு துணை முதல்வா் லட்சுமண்சவதி உத்தரவிட்டுள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...