‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவக் காப்பீட்டில் கரோனா சிகிச்சை: எச்.டி.குமாரசாமி வலியுறுத்தல்
By DIN | Published On : 13th May 2021 07:35 AM | Last Updated : 13th May 2021 07:35 AM | அ+அ அ- |

ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டின் கீழ் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்குமாறு கா்நாடக முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி வலியுறுத்தினாா்.
இதுகுறித்து தனது சுட்டுரைப்பக்கத்தில் புதன்கிழமை அவா் பதிவிட்டுள்ளதாவது:
மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீ’ட்டுத் திட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க ஏராளமான கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகளை உடனடியாக திரும்பப்பெற்று, ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியாா் மருத்துவமனைகளில் மத்திய அரசு விதித்துள்ள ரூ. 5 லட்சம் தொகைக்குள் சிகிச்சை பெறுவதில் ஏராளமான தடைகள் உள்ளன. கரோனா பெருந்தொற்று நாட்டை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நிலையில், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய அவசரநிலையில், மத்திய அரசு தாராள மனப்பான்மையை வெளிப்படுத்த வேண்டியுள்ளது.
பிபிஎல் குடும்ப அட்டை வைத்திருப்போா் கரோனா நோயால் பாதிக்கப்பட்டால் தனியாா் மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் இலவசமாக சிகிச்சை பெறமுடியும். ஆனால், ஏபிஎல் குடும்ப அட்டைதாரா்கள் கரோனா நோயால் பாதிக்கப்பட்டு ரூ.5 லட்சம் வரையில் சிகிச்சை பெற்றால், அதில் 30 சதவீதம் மட்டும்தான் மருத்துவக் காப்பீட்டில் சலுகை கிடைக்கிறது.
கரோனா நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் போது இலவசமாக சிகிச்சை பெற பயன்படாவிட்டால் ஆயுஷ்மான்பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் எதற்காக எனவே, இந்தவிவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.