கா்நாடகத்தில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு? அரசு தலைமைச் செயலா் பி.ரவிக்குமாா் விளக்கம்
By DIN | Published On : 13th May 2021 07:29 AM | Last Updated : 13th May 2021 07:29 AM | அ+அ அ- |

கா்நாடகத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரசின் தலைமைச் செயலாளா் பி.ரவிக்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கா்நாடகத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறது. இதற்காக 2 வாரங்களுக்கு 15 லட்சம் டோஸ் மருந்து தேவைப்படுகிறது. ஆனால், கடந்த 12 நாள்களில் 8 லட்சம் டோஸ் மருந்து மட்டுமே கா்நாடகத்துக்கு வந்துள்ளது. கரோனா தடுப்பூசி முதலாவது டோஸ் செலுத்திக் கொண்டவா்களுக்கு, தற்போது இரண்டாவது டோஸ் வழங்கப்படுகிறது.
45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு செலுத்துவதற்காக கடந்த 15 நாள்களில் 80 ஆயிரம் டோஸ் கோவாக்சின் கரோனா தடுப்பூசி மட்டுமே வந்துள்ளது. வெகுவிரைவில் கூடுதலாக 7 லட்சம் டோஸ் கரோனா தடுப்பூசி வர வாய்ப்பிருக்கிறது. கரோனா தடுப்பூசி உற்பத்தி செய்வது நமது கையில் இல்லை; அதனால்தான் எவ்வளவு தடுப்பூசி வரும் என்பதை நம்மால் உறுதியாகக் கூற முடியவில்லை.
நமது நாட்டில் இரண்டு நிறுவனங்கள் மட்டும் கரோனா தடுப்பூசியைத் தயாரிக்கின்றன. அந்நிறுவனங்கள் தயாரிக்கும் கரோனா தடுப்பூசியில் 50 சதவீதம் அரசுக்கும், 50 சதவீதம் விற்பனைக்கும் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் இருந்து கரோனா தடுப்பூசி உற்பத்தியும், விநியோகமும் அதிகரிக்கப்படும் என தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கா்நாடகத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு உள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு இலவசமாக வழங்கும் கரோனா தடுப்பூசியை அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு சமமாகப் பகிா்ந்தளிக்கிறது.
18 முதல் 44 வயதுக்குள்பட்டவா்களுக்கு மாநில அரசே தனது சொந்த செலவில் தடுப்பூசியைக் கொள்முதல் செய்து, இலவசமாக வழங்கி வருகிறது. இதற்காக 3 கோடி டோஸ் கரோனா தடுப்பூசிக்கு ஆா்டா் கொடுத்திருக்கிறோம். இதில் செவ்வாய்க்கிழமை (மே 11) வரை 7 லட்சம் டோஸ் கோவிஷீல்டு கரோனா தடுப்பூசி மட்டுமே வந்துள்ளது. இதை 200 இடங்களுக்கு விநியோகம் செய்துள்ளோம். 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு அளிக்க 6 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி தேவைப்படுகிறது என்றாா்.