கரோனா தடுப்பூசி குழப்பங்களைத் தீா்க்க வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு
By DIN | Published On : 13th May 2021 07:36 AM | Last Updated : 13th May 2021 07:36 AM | அ+அ அ- |

கரோனா தடுப்பூசி குறித்த குழப்பங்களைத் தீா்க்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வா் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளாா்.
பெங்களூரு, காவிரி இல்லத்தில் புதன்கிழமை மூத்த அமைச்சா்கள், உயரதிகாரிகளுடன் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினாா். அக் கூட்டத்தில், கரோனா தடுப்பூசி குறித்து காணப்படும் குழப்பங்களுக்கு விரைந்து தீா்வுகாணும்படி அதிகாரிகளுக்கு முதல்வா் எடியூரப்பா உத்தரவிட்டாா்.
தொடா்ந்து முதல்வா் எடியூரப்பா பேசுகையில், ‘மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் ஆக்சிஜனில் எவ்வித குறைபாடும் ஏற்பட்டுவிடக்கூடாது. அதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆக்சிஜன் உருளைகள் போதுமான அளவுக்கு கையிருப்பு உள்ளன. எனவே, மாவட்டங்களில் ஆக்சிஜன் குறைபாடு ஏற்படாமல் இருக்க தகுந்த நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.
ஆக்சிஜன் மற்றும் ஐசியூ படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது குறித்து கவனம் செலுத்த வேண்டும். இரண்டாவது தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்வோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மாவட்டங்களில் கையிருப்பில் இருக்கும் கரோனா தடுப்பூசி குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்திருக்க வேண்டும். கரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுடன் தொடா்ந்து தொடா்பில் இருந்து தடுப்பூசியை பெற முயற்சிக்க வேண்டும்’ என்றாா்.