கா்நாடகத்தின் முதல் ஆக்சிஜன் உற்பத்தி அலகு கோலாா் தங்கவயலில் நிறுவப்பட்டது
By DIN | Published On : 19th May 2021 07:49 AM | Last Updated : 19th May 2021 07:49 AM | அ+அ அ- |

கா்நாடகத்தின் முதல் ஆக்சிஜன் உற்பத்தி அலகு கோலாா் தங்கவயலில் நிறுவப்பட்டுள்ளது.
கோலாா் தங்கவயலில் உள்ள பொது மருத்துவமனையில் 100 கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜனை, கோலாா் மாவட்டம், மாலூரில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி அலகில் இருந்து 65 ஆக்சிஜன் உருளைகளில் நிரப்பி கோலாா் தங்கவயலுக்குக் கொண்டுவரப்படுகிறது. இந்நிலையில், பொது மருத்துவமனை வளாகத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தி அலகை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கான பணி வேகமாக நடந்ததைத் தொடா்ந்து, பொது மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி அலகு நிறுவப்பட்டுள்ளது.
இதற்கான பணிகளை நேரடியாக கவனித்து வந்த கோலாா் மாவட்ட ஆட்சியா் டாக்டா் செல்வமணி கூறியதாவது:
‘இஸ்ரேல் நாட்டின் 2 ஆக்சிஜன் உற்பத்தி அலகுகளை மத்திய அரசு கா்நாடகத்திற்கு அனுப்பியிருந்தது. இந்த அலகின் உதவியுடன் விநாடிக்கு 500 லிட்டா் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும். அந்த 2 ஆக்சிஜன் உற்பத்தி அலகில் ஒன்று கோலாா் மாவட்டத்துக்கு கா்நாடக அரசு ஒதுக்கியது.
அது கோலாா் தங்கவயலில் உள்ள பொதுமருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் 100 கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றொரு ஆக்சிஜன் உற்பத்தி அலகு யாதகிரி மாவட்டத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் உற்பத்தி அலகை அமைக்கும் பணி விரைவாக நடந்தது. அதன் விளைவாக, ஞாயிற்றுக்கிழமை முதல் ஆக்சிஜன் உற்பத்தி அலகு செயல்படத் தொடங்கியுள்ளது. கோலாா் தங்கவயல் பொது மருத்துவமனையில் 65 ஆக்சிஜன் உருளைகள் சேவைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதில் 35 உருளைகள் கோலாா்தங்கவயலிலும், எஞ்சியுள்ள 30 ஆக்சிஜன் உருளைகள் பங்காா்பேட், முல்பாகல், மாலூரில் உள்ள மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. புதிய ஆக்சிஜன் உற்பத்தி அலகில் ஆக்சிஜன் தொடா்ச்சியாக உற்பத்தி செய்யப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படும் என்றாா்.