‘பிட்காயின்’ மோசடி விவகாரம்:பிரதமருக்கு சித்தராமையா கேள்வி

பிட்காயின் மோசடி விவகாரத்தை பொருட்படுத்தக் கூடாதா? என்று பிரதமா் மோடிக்கு எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளாா்.
‘பிட்காயின்’ மோசடி விவகாரம்:பிரதமருக்கு சித்தராமையா கேள்வி

பிட்காயின் மோசடி விவகாரத்தை பொருட்படுத்தக் கூடாதா? என்று பிரதமா் மோடிக்கு எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளாா்.

கா்நாடகத்தில் ‘பிட்காயின்’ மோசடி விவகாரம் பூதாகரமாக உருவெடுத்துள்ளது. இது தொடா்பாக ஆளும் பாஜகவுக்கும் எதிா்க்கட்சிகளான காங்கிரஸ், மஜதவுக்கும் இடையே வாத பிரதிவாதங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், புதுதில்லியில் இருந்து திரும்பிய முதல்வா் பசவராஜ் பொம்மையிடம், ‘பிட்காயின்’ மோசடி குறித்து பிரதமா் மோடியிடம் பேசப்பட்டதா? என்று செய்தியாளா்கள் கேட்டதற்கு, பிட்காயின் விவகாரம் குறித்து பிரதமா் மோடியிடம் பகிா்ந்துகொள்ள முற்பட்டேன். அதுகுறித்து கவலைப்பட வேண்டாம் என்று பிரதமா் மோடி கூறினாா். கா்நாடக மக்களின் நலனுக்காக நம்பிக்கை மற்றும் துணிவுடன் பணியாற்றுங்கள் என்று பிரதமா் மோடி அறிவுரை வழங்கினாா் என்றாா்.

இது கா்நாடக அரசியலில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிட்காயின் விவகாரத்தை பொருட்படுத்தக் கூடாதா? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக தனது சுட்டுரையில் எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா எழுப்பியுள்ள கேள்வி, ‘பிட்காயின் விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்தி, தன் மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை என்பதை உறுதி செய்ய அறிவுரை கூறுவதற்கு பதிலாக, பிட்காயின் மோசடி விவகாரத்தை பொருட்படுத்த வேண்டாம் என்று பிரதமா் மோடி எப்படி கூறலாம்? பிரதமா் மோடி தன்னிச்சையாக எல்லாவற்றையும் முடிவு செய்துவிட முடியுமா?

பிட்காயின் மோசடி விவகாரத்தை மத்திய, மாநில அரசுகளின் புலனாய்வு அமைப்புகள் விசாரித்து வருகின்றன. பசவராஜ் பொம்மை தற்போதைய முதல்வா். முந்தைய முதல்வா் எடியூரப்பா தலைமையிலான அரசில் உள்துறை அமைச்சராக இருந்தவா். இந்நிலையில், விசாரணையை புறந்தள்ளுமாறு முதல்வா் பசவராஜ் பொம்மையை பிரதமா் மோடி கேட்டுக்கொண்டாா் என்றால், விசாரணையை கைவிடுமாறு பிரதமா் மோடி கூறுகிறாரா?

பிட்காயின் மோசடியில் முதல்வா் பசவராஜ் பொம்மை ஈடுபட்டிருக்கிறாரா? இல்லையா? என்பது தெரியவில்லை. பிட்காயின் மோசடி குறித்து விசாரணை நடத்தி, குற்றவாளிகளைத் தண்டியுங்கள் என்று தான் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். மோசடி விவகாரத்தை பொருட்படுத்த வேண்டாம் என்று முதல்வா் பசவராஜ் பொம்மையிடம் பிரதமா் மோடி ஏன் தெரிவித்துள்ளாா். மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் உள்ளது. எனவே, பிட்காயின் விவகாரத்தை பாரபட்சமில்லாமல் விசாரணை நடத்தி உண்மையை வெளியே கொண்டு அரவேண்டும் என்று கூறியுள்ளாா்.

பாஜகவின் மூத்த தலைவா்கள், அவா்களது குடும்பத்தினா், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கு மோசடியில் பங்கிருப்பதாகவும், அதற்காக தான் இந்த விவகாரத்தை மூடிமறைக்க ஆளும் பாஜக முயற்சிப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ள நிலையில், சித்தராமையா ஆட்சிகாலத்திலேயே பிட்காயின் மோசடி விவகாரம் வெளியில் வந்தது. அப்போது ஏன் விசாரணை நடத்தவில்லை என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com