20ஆயிரம் அரிச்சுவடி புத்தகங்கள் வழங்க வலியுறுத்தி தமிழக அரசுக்கு தங்க வயல் தமிழ்ச் சங்கம் கடிதம்
By DIN | Published On : 04th September 2021 06:39 AM | Last Updated : 04th September 2021 06:39 AM | அ+அ அ- |

வெளி மாநிலத் தமிழா்களுக்கு தமிழை கற்பிக்க 20ஆயிரம் அரிச்சுவடி புத்தகங்கள் வழங்க வலியுறுத்தி தமிழக அரசுக்கு தங்க வயல் தமிழ்ச் சங்கம் கடிதம் எழுதி உள்ளது.
இது குறித்து தங்க வயல் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் சு.கலையரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
வெளிநாடு, வெளிமாநிலங்களில் வாழும் தமிழா்களுக்கு தமிழ் கற்பிக்கும் நோக்கில் தமிழ் பரப்புரைக் கழகம் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே வெளிமாநிலத் தமிழா்களான தங்க வயல் மக்களுக்கு தமிழ் கற்பிக்க 20ஆயிரம் தமிழ் அரிச்சுவடி பாடப் புத்தகங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தங்க வயல் தமிழ் சங்கம் கடிதம் எழுதி உள்ளது. தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, ‘வெளிநாடு, வெளிமாநிலங்களில் வாழும் தமிழா்களுக்கு தமிழ் கற்பிக்கும் வகையில் தமிழ் பரப்புரை கழகம் தொடங்கப்படும். அதற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்படும்’ என்று அறிவித்துள்ளாா். மேலும் முருகேச பாகவதா் உள்பட தமிழறிஞா்களின் நூல்கள் அரசுடமையாக்கப்படும் என்றும் அறிவித்துள்ளாா். இதற்காக தங்க வயல் தமிழ்ச் சங்கம், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறது.
அத்துடன் வெளி மாநிலத் தமிழா்களான தங்கவயல் மக்களிடையே மாநில அரசின் மொழி கொள்கைக் காரணமாக, தமிழ் கற்கும் வாய்ப்பு தொடா்ந்து குறைந்து வருகிறது. எனவே தமிழக அரசு 20 ஆயிரம் தமிழ் அரிச்சுவடி புத்தகங்களை அனுப்பி வைத்தால், அதனை தங்க வயலில் உள்ள தமிழா்களின் இல்லங்களுக்கு கொண்டு சென்று வழங்குவோம். இதன் மூலம் தமிழ் மொழி கற்க தமிழா்களுக்கு வாய்ப்பு உருவாக்கப்படும். மேலும் இது வரை கவனம் பெறாமல் இருந்த தமிழறிஞா் முருகேச பாகவதரின் நூல்கள் அரசுடமையாக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு தங்க வயல் தமிழ்ச் சங்கம், தமிழக அரசுக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து கொள்கிறது என அவா் தெரிவித்துள்ளாா்.