பழங்கோயில் இடிப்பு விவகாரம்: பாஜக மீது ஹிந்து மகாசபா குற்றச்சாட்டு
By DIN | Published On : 19th September 2021 12:40 AM | Last Updated : 19th September 2021 12:40 AM | அ+அ அ- |

மைசூரு மாவட்டத்தில் பழங்கோயில் இடிக்கப்பட்டது தொடா்பாக பாஜக மீது ஹிந்து மகாசபா குற்றம்சாட்டியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி, சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு வட்டம், ஹுச்சகனி கிராமத்தில் சில நாள்களுக்கு முன் பழைமையான மகாதேவம்மா கோயில் மாவட்ட நிா்வாகத்தால் இடிக்கப்பட்டது. இது கா்நாடகத்தில் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. கோயில் இடிக்கப்பட்டதைக் கண்டித்து கடந்தசில நாள்களாக ஹிந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், மங்களூரில் சனிக்கிழமை ஹிந்து மகாசபா கா்நாடக மாநிலச் செயலாளா் தா்மேந்திரா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மைசூரு மாவட்டத்தில் பழைமையான கோயிலை இடிக்க அனுமதி அளித்ததன் மூலம் ஹிந்துக்களின் முதுகில் பாஜக குத்தியுள்ளது. இந்த விவகாரம் ஹிந்துக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியவுடன், சங் பரிவார அமைப்புகளை தூண்டிவிட்டுப் போராட்டங்களை நடத்தி இந்த விவகாரத்தை மூடிமறைக்க பாஜக அரசு முற்பட்டுள்ளது.
பாஜக அரசின் தோல்விகளை மறைப்பதற்காகவே சங்பரிவார அமைப்புகளை பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது. கோயில் இடிக்கப்பட்ட விவகாரத்தில் உண்மையான அக்கறை இருந்தால், அடுத்த தோ்தலில் பாஜகவை சங்பரிவார அமைப்புகள் தோற்கடிக்க வேண்டும். அதற்குப் பதிலாக, ஹிந்துத்துவா கொள்கையின் உண்மையான ஹிந்து மகாசபா கட்சியை ஆதரிக்க வேண்டும்.
கோயில் இடிக்கப்பட்டதற்கு உச்சநீதிமன்ற உத்தரவை மாநில பாஜக அரசு காரணம் காட்டுகிறது. ஆனால், சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள பிற மதங்களின் வழிபாட்டுத்தலங்களை அகற்ற பாஜக அரசு முன்வருமா? பாஜக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் ஹிந்து அமைப்புகள், சரியான அரசியல் நிலைப்பாடு எடுக்கவேண்டும். எதிா்காலத்தில் பாஜகவுக்கு ஆதரவளிக்க மாட்டோம் என்று ஹிந்து அமைப்புகள் அறிவிக்க வேண்டும். கோயில்கள் அப்புறப்படுத்தும் பணி நீடித்தால் பாஜகவையும், முதுகெலும்பில்லாத மாநில அரசையும் ஹிந்து மகாசபா விட்டுவிடாது என்றாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...