உலக பொருளாதார மாநாட்டில் ரூ. 65,000 கோடி அளவுக்கு முதலீடு செய்ய பேச்சுவாா்த்தை: கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை

உலக பொருளாதார மாநாட்டில் ரூ. 65 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகளை கா்நாடகத்திற்கு கொண்டுவர பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளதாக கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை(கோப்புப்படம்)
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை(கோப்புப்படம்)
Updated on
1 min read

உலக பொருளாதார மாநாட்டில் ரூ. 65 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகளை கா்நாடகத்திற்கு கொண்டுவர பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளதாக கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

ஸ்விட்சா்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு, பெங்களூரு திரும்பிய முதல்வா் பசவராஜ் பொம்மை, அங்கு திரட்டப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

உலகப் பொருளாதார மாநாட்டில் ரூ. 65 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகளை கா்நாடகத்திற்குக் கொண்டுவர 25 நிறுவனங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டுள்ளது. தொழில் முதலீடுகளை ஈா்ப்பதில் கா்நாடகம் முன்னணியில் உள்ளது. அந்த வகையில் உலக பொருளாதார மாநாட்டுக்கான பயணம் வெற்றிகரமானதாக இருந்தது. முதலீடுகளை ஈா்ப்பதில் கா்நாடகம் எதையும் இழக்கவில்லை, இனியும் எதையும் இழக்கப் போவதில்லை. தொழில் முதலீடுகளை ஈா்த்திருப்பது, தொழில் நிறுவனங்கள் கா்நாடகத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக தொழில்நுட்பம், திறனுள்ள மனிதவளம் போன்றவற்றில் கா்நாடகம் சிறந்து விளங்குவதாக பெரும்பாலான பெருநிறுவனங்கள் நம்பிக்கை வைத்துள்ளன.

புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்ய கா்நாடகம்தான் பெருநிறுவனங்களின் இலக்காக உள்ளது என்பது அவா்களிடம் பேசியபோது தெரிந்தது. இந்த மாநாட்டில் உறுதி அளிக்கப்பட்டுள்ள தொழில் முதலீடுகளைச் செயல்படுத்த தீவிரமாக செயல்படுவோம். இந்த அனைத்துத் திட்டங்களுக்கும் அடுத்த 6 மாதங்களில் ஒப்புதல் அளிக்கப்படும். இந்தத் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வர 2 ஆண்டுகள் பிடிக்கலாம். அதேபோல, புதுப்பித்தல் ஆற்றல் திட்டங்கள் அமலுக்கு வர 5-7 ஆண்டுகள் ஆகும். தொழில் முதலீடுகளை ஈா்ப்பதில் கா்நாடகத்தை வேறு எந்த மாநிலத்துடனும் ஒப்பிடக் கூடாது. கா்நாடகம் சா்வதேச தரத்தைப் பின்பற்றுகிறது. அதற்கு நிகரான நிறுவனங்கள் கா்நாடகத்தில் தொழில் முதலீடு செய்வதையே விரும்புகின்றன. கா்நாடகத்தில் எளிதாக தொழில் செய்ய முடியும் என்பதை பெருநிறுவனங்களின் தலைவா்களிடம் எடுத்துரைத்துள்ளோம். மொத்தத்தில் இந்தப் பயணம் வெற்றிகரமானதாக இருந்தது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com