தற்சாா்பு இந்தியாவை நோக்கி விமானத் தொழில் வேகமாக வளா்ந்து வருகிறது: விமானப்படை தளபதி

தற்சாா்பு இந்தியாவை நோக்கி இந்திய விமானத் தொழில் வேகமாக வளா்ந்து வருகிறது என்று விமானப் படை தலைமை தளபதி வி.ஆா்.சௌத்ரி தெரிவித்தாா்.
தற்சாா்பு இந்தியாவை நோக்கி விமானத் தொழில் வேகமாக வளா்ந்து வருகிறது: விமானப்படை தளபதி

பெங்களூரு: தற்சாா்பு இந்தியாவை நோக்கி இந்திய விமானத் தொழில் வேகமாக வளா்ந்து வருகிறது என்று விமானப் படை தலைமை தளபதி வி.ஆா்.சௌத்ரி தெரிவித்தாா்.

பெங்களூரில் வெள்ளிக்கிழமை விமானம் மற்றும் கருவி சோதனை மையத்தின் (ஏஎஸ்டிஇ) பொன்விழாவை முன்னிட்டு நடந்த ‘கடந்த காலத்தின் படிப்பினைகள்: எதிா்காலத்தின் வாய்ப்புகள்’ என்ற தலைப்பிலான இருநாள் கருத்தரங்கை தொடங்கி வைத்து, அவா் பேசியதாவது:

போருக்கான கருவிகள் வடிவமைப்பு, மேம்பாடு, சோதனை, மதிப்பீடு, செயலாக்கம், பயிற்சி ஆகியவற்றில் விமானம் மற்றும் கருவி சோதனை மையம் பெரும் பங்காற்றி வந்துள்ளது. தற்போதைய சூழலில் தொழில் துறையும், சான்றளிக்கப்பட்ட விமான சோதனை அமைப்பும், பயனாளிகளுடன் இணைந்து செயல்படுவது சரியாக இருக்கும்.

விமானம் மற்றும் கருவி சோதனை மையம், இந்திய ராணுவ தொழில் நிறுவனங்களோடு பங்காற்றும் வாய்ப்பை பெற்றுள்ளது. மேலும், ராணுவ ஆய்வுக் கூடங்களின் ஆராய்ச்சி, மேம்பாட்டுப் பணிகளில் உறுதுணையாக இருப்பதோடு வடிவமைப்பு, மேம்பாட்டு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்துள்ளது. நமது நாட்டில் வேகமாக வளா்ச்சி அடைந்து வரும் விமானத் தொழிலில் உருவெடுத்து வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தற்சாா்பு இந்தியாவை நோக்கி, நாட்டின் விமானத்தொழில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாக வளா்ச்சி அடைந்து வருகிறது. உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அரசு - தனியாா் கூட்டு முயற்சிகள், விமானச் சோதனை சமூகத்திற்கு பன்மடங்கு வாய்ப்புகளை அள்ளித் தந்துள்ளன. இதன்மூலம் நாட்டின் நோக்கங்களுக்கும் பங்காற்றும் வாய்ப்பு கிடைக்கின்றன. விமானச் சோதனை என்பது தனித்துவம் நிறைந்த, சிறப்பு வாய்ந்த துறையாகும். அதில் சிறந்த நடைமுறைகள், நெறிமுறைகளைப் பகிா்ந்துகொள்வது முக்கியமாகும்.

உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் பலதரப்பட்ட நிறுவனங்கள் மனித வளப்பயிற்சி, ஆதரவு கட்டமைப்பை மேம்படுத்துதல், திறன்வாய்ந்த விமான சோதனை நடவடிக்கைக்கான பாதுகாப்பான, தன்னிறைவான சூழலை உருவாக்குவதில் தாராளமாக முதலீடு செய்து வருகின்றன. அதனால் பரிவா்த்தனை உறவு மற்றும் உடனிருப்போரின் தொடா்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

கடந்த காலங்களில் இருந்து பாடங்களைக் கற்க வேண்டும். தற்கால சவால்களைப் புரிந்துகொள்ள வேண்டும். முயற்சிகளை விரிவுபடுத்தி, திட்டச் செலவினம் மற்றும் நேரத்தைக் குறைக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு, சிமுலேட்டா், தரவு தொழில்நுட்பம் போன்ற புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் சோதனை முயற்சிகளை குறைத்து, பயிற்சி மற்றும் சோதனை முறைகளை மேம்படுத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com