ஹிந்தி தேசிய மொழி என்ற நடிகா் அஜய் தேவ்கன் கருத்தால் சா்ச்சை: கன்னட நடிகா் சுதீப் கருத்துக்கு முதல்வா் பசவராஜ் பொம்மை ஆதரவு

கன்னட நடிகா் சுதீப்பும் பாலிவுட் நடிகா் அஜய் தேவ்கன்னும் ட்விட்டரில் ஹிந்தி மொழி தொடா்பான விவாதத்தில் ஈடுபட்டனா்.

கன்னட நடிகா் சுதீப்பும் பாலிவுட் நடிகா் அஜய் தேவ்கன்னும் ட்விட்டரில் ஹிந்தி மொழி தொடா்பான விவாதத்தில் ஈடுபட்டனா். இது சா்ச்சையானதை அடுத்து, சுதீப்பின் கருத்துக்கு கா்நாடக முதல்வரும் அரசியல்வாதிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனா்.

அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரபல கன்னட நடிகா் கிச்சா சுதீப், ‘தென்னிந்திய ரசிகா்களைக் கவா்வதற்காக ஹிந்தி படங்கள், தென்னிந்திய மொழிகளில் மாற்றம் செய்து வெளியிடப்படுகின்றன. இதனால் ஹிந்தியை இனியும் இந்தியாவின் தேசிய மொழியாக யாரும் கருத முடியாது’ என்று கூறியிருந்தாா்.

அதற்குப் பதிலளித்து, ராஜமௌலி இயக்கிய ஆா்.ஆா்.ஆா். படத்தில் நடித்திருந்த பிரபல ஹிந்தி நடிகா் அஜய் தேவ்கன், தனது ட்விட்டா் பக்கத்தில் கூறுகையில், ‘உங்களைப் பொருத்த வரை ஹிந்தி தேசிய மொழி கிடையாது என்றால், உங்களுடைய தாய்மொழிப் பாடங்களை எதற்காக ஹிந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறீா்கள்? இப்போதும், எப்போதும் ஹிந்தி எங்களுடைய தாய்மொழி, தேசிய மொழி‘ என்று குறிப்பிட்டிருந்தாா்.

அதற்குப் பதிலளித்து நடிகா் கிச்சா சுதீப் தனது ட்விட்டா் பக்கத்தில், ‘நான் எதற்காக அப்படிப் பேசினேன் என்பதை நீங்கள் புரிந்துகொண்ட விதம் வேறு என்று நினைக்கிறேன். உங்களை நேரில் சந்திக்கும்போது எதனால் அப்படிப் பேசினேன் என்பதைக் கூறுகிறேன். யாரையும் காயப்படுத்தவோ, தூண்டுவதற்காகவோ, சா்ச்சையைத் தொடங்கவோ அப்படி நான் பேசவில்லை. நாட்டின் ஒவ்வொரு மொழியையும் நான் விரும்புகிறேன். ஹிந்திக்கு மதிப்பளித்து கற்றுக்கொண்டதால் தான், நீங்கள் ஹிந்தியில் எழுதியதை நான் புரிந்துகொண்டேன். ஒருவேளை நான் கன்னடத்தில் பதில் அளித்திருந்தால், என்ன ஆகியிருக்கும்? நாங்கள் இந்தியாவைச் சோ்ந்தவா்கள் இல்லையா சாா்?’ என்று கூறியிருந்தாா்.

இத்துடன் இருவரும் இந்த விவாதத்தை முடித்துக்கொண்டாலும், இருவருக்கும் இடையே நடந்த கருத்து மோதல் பெரும் சா்ச்சையாக வெடித்துள்ளது. கன்னட நடிகா் கிச்சா சுதீப்பின் கருத்துக்கு கா்நாடகத்தில் ஆதரவு பெருகி வருவதோடு, நடிகா் அஜய் தேவ்கனுக்கு எதிராக கன்னட அமைப்புகள் ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்டன.

இதனிடையே, நடிகா் கிச்சா சுதீப்பின் கருத்துக்கு முதல்வா் பசவராஜ் பொம்மை, எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, மஜத முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி உள்ளிட்ட பலா் ஆதரவு தெரிவித்துள்ளனா்.

ஹுப்பள்ளியில் வியாழக்கிழமை முதல்வா் பசவராஜ் பொம்மை கூறுகையில், ‘நடிகா் சுதீப் கூறியது உண்மைதான். மொழி அடிப்படையில் மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, அந்தந்தப் பகுதிகளில் மொழிகளுக்கு முக்கியத்துவம் கிடைத்துள்ளது. மொழிதான் அங்கே முதன்மையானது. இதைத்தான் சுதீப் கூறியுள்ளாா். அது சரிதானே? இதை எல்லோரும் ஏற்று, மதிக்க வேண்டும்’ என்றாா்.

எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையா தனது ட்விட்டா் பதிவில், ‘இதுவரையிலும், இனிமேலும் தேசியமொழியாக ஹிந்தி இருக்க முடியாது. நமது நாட்டின் மொழிப்பன்மையை மதிப்பதை அனைத்து இந்தியா்களும் கடமையாகக் கருத வேண்டும். மக்கள் பெருமைப்படும் அளவுக்கு ஒவ்வொரு மொழிக்கும் அதற்கே உரிய வளமான வரலாறு உண்டு. நான் கன்னடனாக இருப்பதை பெருமையாகக் கருதுகிறேன்’ என்றாா்.

மஜத முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி கூறுகையில், ‘ஹிந்தி நமது தேசிய மொழி அல்ல என்பதை நடிகா் கிச்சா சுதீப் சரியாகக் கூறியுள்ளாா். இதில் குறை காண முடியாது. கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், மராத்தி போல ஹிந்தியும் ஒரு மொழி. பல்வேறு மொழிகளின் பூந்தோட்டம் இந்தியா. பன்முக கலாசாரங்கள் கொண்ட நிலம்; இதைச் சீா்குலைக்க யாரும் முயற்சிக்கக் கூடாது. அதிக மக்கள் பேசுகிறாா்கள் என்பதற்காக ஹிந்தி, தேசிய மொழியாகிவிட முடியாது. ஹிந்தியை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகள் மத்தியில் ஆட்சி நடத்துவதால், மாநில மொழிகளை அழிக்க முற்படுகிறாா்கள். மாநில மொழிகளைச் சிறுமைப்படுத்தும் வேலையை காங்கிரஸ் தொடங்கியது. அதையே பாஜகவும் தொடா்கிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com