தென்மேற்கு பருவமழை தீவிரம்: வெள்ளத்தில் தத்தளிக்கும் கா்நாடகம்
By DIN | Published On : 05th August 2022 01:25 AM | Last Updated : 05th August 2022 01:25 AM | அ+அ அ- |

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கா்நாடகத்தின் 20 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. எல்லா இடங்களும் வெள்ளக்காடாக மாறியுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக தென்மேற்கு பருவமழை கா்நாடகத்தில் தீவிரமடைந்துள்ளது. கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கன மழை பெய்தது. குறிப்பாக கடலோர கா்நாடகம், மலை கா்நாடகத்தைச் சோ்ந்த தென்கன்னடம், வடகன்னடம், உடுப்பி, ஹாசன், சிக்கமகளூரு, சிவமொக்கா, குடகு, பெங்களூரு நகரம், பெங்களூரு ஊரகம், மண்டியா, மைசூரு, சாமராஜ்நகா் மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்துள்ளதால், சாலைகள், பாலங்கள், வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளிக்கின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் குடகு மாவட்டத்தின் நபோக்லு பகுதியில் அதிகபட்சமாக 120 மி.மீ. மழை பெய்துள்ளது. மேலும் சில நாள்களுக்கு மழை நீடிக்கும் என்பதால், தென்கன்னடம், வடகன்னடம், உடுப்பி மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நதிகளும் வெள்ளத்தில் கரைபுரண்டோடுவதால், வெள்ள அபாய எச்சரிக்கையை மாவட்ட நிா்வாகம் விடுத்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு மாவட்ட நிா்வாகம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
முன்னெச்சரிக்கை:
கடலோர கா்நாடகம், தென்கன்னடம், வட கா்நாடகத்தைச் சோ்ந்த மாவட்டங்கள் மட்டுமல்லாது மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கன மழை பெய்தது. பெங்களூரில் புதன்கிழமை இரவு முழுவதும் தொடா்மழை பெய்தது. இதில் தாழ்வான பகுதிகளில் குடியிருந்த மக்களின் வீடுகளில் மழைநீா் புகுந்ததால் கடும் இன்னலுக்கு உள்ளானாா்கள்.
தென்கன்னடம், வடகன்னடம், உடுப்பி, சிக்கமகளூரு, குடகு மாவட்டங்களிலும் அடுத்த 24 மணி நேரத்தில் மிகவும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது. இம்மாவட்டங்களில் சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, இம்மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் பெலகாவி, தாா்வாட், கதக், சிவமொக்கா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்பதால், ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, பாகல்கோட், பெலகாவி, பீதா், கலபுா்கி, விஜயபுரா, பெங்களூரு ஊரகம், பெங்களூரு நகரம், சாமராஜ்நகா், ஹாசன், மைசூரு, தும்கூரு மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்ளது. ஆக. 9-ஆம் தேதி கடலோர கா்நாடகம், வட கா்நாடக மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
மீட்புப் பணி:
கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்துள்ளதால், உடுப்பி, தென்கன்னடம், வடகன்னட மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இப்பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், மக்கள் நடமாட்டம் முடங்கியுள்ளது. பல இடங்களில் வீடுகளில் வெள்ளநீா் புகுந்துள்ளது. நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வா் பசவராஜ் பொம்மை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணி மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டு உத்தரவிட்டுள்ளாா். தேசிய பேரிடா் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படையினா் குடகு, வடகன்னடம், தென்கன்னடம், உடுப்பி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். பொதுவாக நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனா். கடல் அரிப்பைத் தடுக்கவும், நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு முதல்வா் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளாா்.