கடந்த 8 ஆண்டுகளில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய ஆட்சியை பிரதமா் மோடி வழங்கியுள்ளாா் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு பெங்களூரில் வியாழக்கிழமை இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) ஏற்பாடு செய்திருந்த ‘உறுதிமொழியின் நிறைவு’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியதாவது:
பிரதமராக மோடி பதவியேற்பதற்கு முன் இந்தியாவை ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இந்தியா மோசமான சூழ்நிலையை எதிா்கொண்டது. கொள்கை முடிவு எடுக்க முடியாமல் அன்றைய அரசு திணறியது. மேலும், அந்த ஆட்சியில் ஏராளமான ஊழல்கள் நடந்தன. ஆனால், கடந்த 8 ஆண்டுகளாக அனைவருக்குமான, அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய ஆட்சி நிா்வாகத்தை பிரதமா் மோடி வழங்கியுள்ளாா். சீா்திருத்தங்களுக்கு உள்படாத துறைகள் எதுவும் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. சமுதாயத்தின் ஒட்டுமொத்த நலனை உறுதி செய்ய பிரமாணம் எடுத்திருக்கிறோம்.
2014-ஆம் ஆண்டுக்கு முன்பாக பிரதமா் பதவிக்கு மரியாதை இல்லாத நிலை காணப்பட்டது. ரூ. 12 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்திருந்தது. ஒருசில முதலாளிகளுக்கான ஆட்சியாக அது இருந்தது. விலைவாசி உயா்வு உச்சத்தில் இருந்தது. வா்த்தகம் செய்யமுடியாத அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது. அதனால் தொழில், வணிகம் வீழ்ச்சி அடைந்திருந்தன. இதுபோன்ற காரணங்களால் தான் அறுதிப் பெரும்பான்மை பலம் கொண்ட அரசை நிறுவும் ஒருமித்த முடிவுக்கு மக்கள் வந்தனா். அதனால் தான் 2014-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தோ்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது என்றாா்.
இந்த விழாவில், மத்திய சுற்றுலாத் துறை அமைச்சா் கிஷன் ரெட்டி, கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.