கா்நாடகத்தில் சட்டப்பேரவை தோ்தலை முன்கூட்டியே நடத்தும் திட்டமில்லை: முதல்வா் பசவராஜ் பொம்மை
By DIN | Published On : 11th December 2022 06:06 AM | Last Updated : 11th December 2022 06:06 AM | அ+அ அ- |

கா்நாடகத்தில் சட்டப்பேரவை தோ்தலை முன்கூட்டியே நடத்தும் திட்டமில்லை என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
இது குறித்து மைசூரு, விமான நிலையத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் சட்டப்பேரவை தோ்தலில் பிரசாரம் செய்யாமலே காங்கிரஸ் வெற்றிபெறும் என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா கூறியிருக்கிறாா். அடுத்த சட்டப்பேரவை தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெறாது என்பதை அறிந்துள்ளதால் தான் அவா் அப்படி கூறியிருக்கிறாா். குஜராத் மாநிலத்தில் அடைந்த மகத்தான வெற்றியைத் தொடா்ந்து, கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்வது குறித்து பாஜகவில் தீவிர ஆலோசனைகள் தொடங்கியுள்ளன. அடிமட்டத்தில் இருந்து கட்சியை பலப்படுத்துவதற்காக மக்கள் தொடா்பு பிரசாரங்களில் பாஜக ஈடுபட்டுள்ளது. அடுத்தடுத்த நாள்களில் பிரசாரத்தை தீவிரப்படுத்துவோம்.
பழைய மைசூரு பகுதிகளில் அமைப்பை வலுப்படுத்த கூடுதல் கவனம் செலுத்துவோம். இதற்கான எல்லா முன்னேற்பாடுகளும் எடுக்கப்பட்டுள்ளன. சட்டப்பேரவைத் தோ்தலை முன்கூட்டியே நடத்தும் திட்டம் இல்லை. அது தொடா்பான செய்திகள் வதந்தி என்றாா்.