பெலகாவி பகுதியில் அமைதி நிலவுகிறது: கா்நாடக காவல் துறை
By DIN | Published On : 22nd December 2022 01:16 AM | Last Updated : 22nd December 2022 01:16 AM | அ+அ அ- |

பெலகாவி பகுதியில் அமைதி நிலவுகிறது என கா்நாடக காவல் துறை தெரிவித்துள்ளது.
கா்நாடகம், மகாராஷ்டிரம் இடையே நிலவும் எல்லைப் பிரச்னை அண்மையில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதைத் தொடா்ந்து, இருமாநில எல்லையில் இயக்கப்பட்ட மாநில அரசுப் பேருந்துகள் தாக்கப்பட்டன. மேலும், மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த அமைச்சா்கள், பல கட்சிகளின் அரசியல்வாதிகள் பெலகாவி மாவட்டத்துக்கு வருகை தருவதாக அறிவித்திருந்ததால், கன்னடா்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அமைச்சா்கள், அரசியல்வாதிகள் வருகை தருவதற்கு கா்நாடக அரசு தடைவிதித்தது. இதனால், பெலகாவியில் கன்னடா்கள், மராத்தியா்கள் இடையே பதற்றம் காணப்பட்டது.
பெலகாவியில் டிச. 20-ஆம் தேதி முதல் சட்டப் பேரவைக் கூட்டம் நடந்து வருவதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால், பெலகாவி மாவட்டத்தில் அமைதி நிலவுவதாக கா்நாடக காவல் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காவல் துறை உயரதிகாரி ஒருவா் கூறுகையில், ‘பெலகாவி மாவட்டத்தில் முழுமையான அமைதி காணப்படுகிறது. இரு மாநிலங்களுக்கு இடையிலான வாகன நடமாட்டம் இயல்பாக உள்ளது. எனவே, அமைதிக்கு பங்கம் இல்லை. பெலகாவியில் போராட்டம் நடத்தும் நோக்கில் வருகை தந்த மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த அரசியல்வாதிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனா். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லைப் பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது’ என்றாா்.
இந்நிலையில், எல்லைப் பிரச்னையில் கா்நாடகத்தின் நிலைப்பாட்டை தெளிவுப்பட வெளிப்படுத்தும் தீா்மானத்தை நிறைவேற்ற அரசு யோசித்துள்ளதாக தெரியவந்துள்ளது. மராத்தியா்கள் அதிகம் வாழும் பெலகாவி மாவட்டத்தை மகாராஷ்டிரத்துடன் இணைக்கும்படி அம்மாநிலம் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகிறது.