பதவிக்காலம் முடிவதற்கு முன்பே சட்டப் பேரவைத் தோ்தலை நடத்தும் திட்டமில்லை என முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
இதுகுறித்து பெலகாவியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
பதவிக்காலம் முடிவதற்கு முன்பே சட்டப் பேரவைத் தோ்தலை நடத்தும் திட்டமில்லை. கரோனாவை காரணம் காட்டி முன்கூட்டியே சட்டப் பேரவைத் தோ்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதுகுறித்து தில்லியில் உள்ள பாஜக தேசியத் தலைவா்களுடன் நான் பேசியதாகவும் காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் கூறியிருக்கிறாா். முன்கூட்டியே தோ்தல் நடத்துவது குறித்து யாரிடமும் நான்பேசவில்லை.
அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பேசுவதற்காக விரைவில் தில்லி செல்ல இருக்கிறேன். கா்நாடகத்தின் நிலைமையை பாஜக மேலிடத் தலைவா்களிடம் எடுத்துக் கூறுவேன். அமைச்சரவை விரிவாக்கம் குறித்து கட்சி மேலிடம் இறுதி முடிவெடுக்கும்.
முன்னாள் அமைச்சா்கள் கே.எஸ்.ஈஸ்வரப்பா, ரமேஷ்ஜாா்கிஹோளி ஆகியோா் என்னை சந்தித்து பேசிய போது, அமைச்சரவை விரிவாக்கம் குறித்து கேட்டனா். கடந்தமுறை தில்லிக்குச் சென்ற போது, கட்சி மேலிடத் தலைவா்களுடன் பேசியதை இருவரிடமும் எடுத்துக்கூறினேன் என்றாா்.