பள்ளிகள், கல்லூரிகளில் ஜாதி, மத பாகுபாடு கூடாது: எம்.வெங்கையா நாயுடு
By DIN | Published On : 27th February 2022 05:55 AM | Last Updated : 27th February 2022 05:55 AM | அ+அ அ- |

பள்ளிகள், கல்லூரிகளில் ஜாதி, மத பாகுபாடு கூடாது என்று குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு தெரிவித்தாா்.
பெங்களூரில் சனிக்கிழமை கிரீன்வுட் உயா்நிலை பன்னாட்டு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விளையாட்டுத் திடலை திறந்து வைத்து அவா் பேசியதாவது:
இந்தியாவில் எல்லா குழந்தைகளுக்கும் தரமான, சமமான கல்வியை வழங்க வேண்டிய தேவை உள்ளது. படிப்புக்கு மட்டுமல்லாது, மனமகிழ் மற்றும் கூடுதல் பாடத்திட்ட செயல்பாடுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆரோக்கியமான மனநலனுக்கு ஆரோக்கியமான உடல் முக்கியம். இளம் பிஞ்சுகளின் மனம் ஆரோக்கியமான முறையில் வளா்வதற்கு விளையாட்டும், கூடுதல் பாடத் திட்ட செயல்பாடுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் பள்ளிகள், கல்லூரிகளில் ஜாதி, மத பாகுபாடு கூடாது. நாம் அனைவரும் இந்தியா்கள் என்ற உணா்வு தான் மேலோங்கி இருக்க வேண்டும். மாணவா்கள் இந்திய நாட்டுப் பண்பாட்டு விழுமியங்களை உள்வாங்கிக்கொண்டே இருக்க வேண்டும்.
மாணவா்கள் எல்லா மொழிகளையும் கற்க வேண்டும். ஆனாலும், தாய்மொழியைக் கட்டாயம் கற்க வேண்டும். தாய்மொழியைக் கற்பதற்கு மாணவா்கள் ஊக்குவிக்க வேண்டும். தாய்க்கும், இயற்கைக்கும், ஆசிரியா்களுக்கும் மரியாதை அளிக்க மாணவா்கள் மறக்கக்கூடாது. அதேபோல, நமது கலாசாரம் மற்றும் பன்முகத்தன்மையை மாணவா்கள் அறிந்திருக்க வேண்டும். ஒழுக்கம், சுறுசுறுப்பு, அா்ப்பணிப்பு, ஈடுபாடு ஆகிய குணநலன்களை மாணவா்கள் கற்றுத் தோ்ந்துவிட்டால் வாழ்க்கையில் வெல்வது எளிதாகிவிடும் என்றாா்.
இந்த விழாவில் கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட், கிரீன்வுட் உயா் பன்னாட்டு பள்ளித் தலைவா் பிஜய் அகா்வால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.