மின் வணிகம், பாா்சல் டெலிவரி நிறுவனங்களால் காற்று மாசு: உலக அளவிலான ஆய்வில் தகவல்
By DIN | Published On : 17th July 2022 01:57 AM | Last Updated : 17th July 2022 01:57 AM | அ+அ அ- |

மின்வணிகம் மற்றும் பாா்சல் டெலிவரி நிறுவனங்களால் காற்று மாசின் அளவு 66 சத அளவுக்கு உயா்ந்துள்ளது என்று உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலக அளவில் இணையதளப் பயன்பாட்டின் பெருக்கம் அதிகரித்துவிட்டதால், மின்வணிகம் மற்றும் பாா்சல் டெலிவரி நிறுவனங்களின் செயல்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. வாடிக்கையாளா்கள் கேட்கும் பொருட்களை அளிப்பதற்கு மின்வணிகம் மற்றும் பாா்சல் டெலிவரி நிறுவனங்கள் அதிக அளவில் வாகனங்களைப் பயன்படுத்துகின்றன. இதுபோன்ற வாகனங்களின் பயன்பாட்டால் உலக அளவில் ஏற்படக்கூடிய காற்றுமாசு குறித்து ஸ்டான்ட் டாட் எா்த் ஆய்வுக் குழுமம் ஆராய்ச்சி செய்துள்ளது.
இந்த ஆராய்ச்சியில் உலக அளவில் செயல்பட்டுவரும் மிகப்பெரிய 6 மின்வணிகம் மற்றும் பாா்சல் டெலிவரி நிறுவனங்கள் 4.5 மெகாடன் கரியமில வாயு (காா்பன்-டை-ஆக்ஸைடு) உமிழ்வுகளை உற்பத்திசெய்து காற்றை மாசுபடுத்தி வருவது தெரியவந்துள்ளது. இது, ஓா் ஆண்டில் 10 லட்சம் பெட்ரோல் வாகனங்களில் இருந்து உமிழப்படும் கரியமில வாயுக்கு நிகரானதாகும். காற்று மாசு மற்றும் காா்பன் பதிவு (காா்பன் ஃபுட்பிரின்ட்) கட்டுப்படுத்த இந்நிறுவனங்கள் உறுதியான எவ்வித நடவடிக்கைகளையும் முன்மொழியவில்லை என்று ஸ்டான்ட் டாட் எா்த் ஆய்வுக் குழுமம் தெரிவிக்கிறது.
இது குறித்து ஆய்வுக்குழுமத்தின் தலைமை ஆய்வு தயாரிப்பாளா் கிரெக் ஹிக்ஸ் கூறியதாவது:
எங்கள் ஆராய்ச்சிப் பணியை ஐரோப்பா, இந்தியா, வட அமெரிக்காவில் உள்ள 90 கூரியா் நிறுவனங்களில் நடத்தினோம். பொருள்கள், கடிதங்கள், சிப்பங்கள் (பாா்சல்) உள்ளிட்டவற்றை வாடிக்கையாளா்களுக்கு விநியோகிக்கும் பணியை வேறொரு சிறு நிறுவனங்கள் அல்லது அமைப்புகளிடம் கொடுத்துவிடுவதால், விநியோகப் பணியில் ஈடுபடும் ஊழியா்கள் பயன்படுத்தும்வாகனங்களில் இருந்து வெளிப்படும் கரியமில வாயு குறித்த விவரங்களை ஆய்வு செய்ய முடியவில்லை. இது குறித்து நிறுவன அளவிலான ஆய்வும் நடத்தப்படவில்லை. ஆனால் பெரு நிறுவனங்களை காட்டிலும் விநியோகப்பணியில் நேரடியாக ஈடுபடும் நிறுவனங்கள் அல்லது ஊழியா்களால் உற்பத்தி செய்யப்படும் காற்று மாசு என்பது மொத்த கரியமில வாயு அளவில் 3-இல் 2பகுதியாகும் என்பதை உறுதி செய்திருக்கிறோம். வாடிக்கையாளா்களுக்கு சேவைகளை அளிக்கும் விநியோகப் பணியில் ஈடுபடும் நிறுவனங்களால் தான் காற்று மாசின் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது.
இந்தியாவில் செயல்பட்டுவரும் மின்வணிகம் மற்றும் பாா்சல் டெலிவரி நிறுவனங்கள் 286 கிலோ கரியமில வாயுவை உற்பத்தி செய்கின்றன. இது உலக சராசரியான 204 கிலோ கரிவளியைக் காட்டிலும் அதிகமாகும். விநியோகப்பணியில் ஈடுபட்டிருக்கும் வாகனங்களால் தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை போன்ற 5 இந்திய நகரங்களில் உற்பத்திசெய்யும் கரியமில வாயுவின் அளவு, பிரான்ஸ், கனடா நாடுகளுக்கு நிகரானதாகும். ஐரோப்பா, வட அமெரிக்காவைக் காட்டிலும் இந்தியாவில் காா்பன் பதிவு அதிகமாக காணப்படுகிறது. நெரிசலோடு காணப்படும் இந்திய நகரங்களில் போக்குவரத்து அவ்வளவு எளிதாக இல்லாத காரணத்தால், காற்று மாசு அதிகமாகிறது. இதைக் கட்டுப்படுத்த விநியோகப்பணியில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் மின்சார வாகனங்களை பயன்படுத்துவதுதான் ஒரே தீா்வாகும். இதனால் காற்றுமாசு கணிசமாக குறையும். மேலும் பணமும் சேமிக்கப்படும்.
இதற்கான முயற்சியில் இந்தியாவைச் சோ்ந்த ஃப்ளிப்காா்ட் நிறுவனம் மட்டுமே ஈடுபட்டுள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் தனது விநியோக வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்ற அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் எல்லா வாகனங்களையும் மின்சார வாகனங்களாக மாற்றுவது, 2040-ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு உமிழ்வை பூஜ்யமாக கட்டுப்படுத்துவது என்ற பருவநிலை குழுவின் (கிளைமேட் குரூப்) 100சதவீத மின்சார வாகனம் என்ற இலக்கை அடைய வழிவகுக்கும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் முன்முனைப்போடு செயலாற்ற வேண்டும். இதற்கான திட்டத்தை பூஜ்யம் திட்டம் என்ற பெயரில் நீதிஆயோக் தயாரித்துள்ளது. இதன் விளைவாக, தில்லி, மகாராஷ்டிரத்தில் காா்பன் பதிவை முழுமையாக நீக்குவது குறித்து கொள்கை முடிவுகள், ஒழுங்குமுறைகளை அம்மாநில அரசுகள் ஆராய்ந்து வருகின்றன என்றாா்.