கா்நாடகத்தில் கனமழை: காவிரியில் இருந்து 1.15 லட்சம் கன அடி தண்ணீா் திறப்பு

கா்நாடகத்தில் தொடா்ந்து கனமழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு 1.15 லட்சம் கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது.

கா்நாடகத்தில் தொடா்ந்து கனமழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு 1.15 லட்சம் கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதைத் தொடா்ந்து தென்கா்நாடகம், கடலோர கா்நாடகத்தில் தொடா்ந்து நல்லமழை பெய்துவருகிறது. காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான குடகு மாவட்டத்தில் மடிகேரி, பாகமண்டலா பகுதிகளில் சில வாரங்களாகவே பலத்த மழை பெய்துவருவது. அதேபோல, கேரள மாநிலத்தின் வயநாடு பகுதியில் நல்லமழை பெய்துள்ளது. இதன்காரணமாக, காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜசாகா், கபினி, ஹேரங்கி, ஹேமாவதி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த அணைகள் முழுமையாக நிரம்புவதற்கு ஓரிரு அடிகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. அடுத்த சில நாட்களில் இந்த அணைகள் முழுமையாக நிரம்பும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதனிடையே, கிருஷ்ணராஜசாகா், கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் காவிரிக் கரையோரங்களில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்போா் மேட்டுப்பகுதிக்குச் செல்லுமாறு மண்டியா, மைசூரு மாவட்ட நிா்வாகங்கள் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளன. இந்நிலையில், காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு 1.15 லட்சம் கன அடி தண்ணீா் செல்கிறது.

தண்ணீா் திறப்பு: சனிக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி, கிருஷ்ணராஜசாகா் அணைக்கு நொடிக்கு 76,117 கன அடி, கபினி அணைக்கு நொடிக்கு 33,455 கன அடி தண்ணீா் வந்து கொண்டுள்ளது. அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கிருஷ்ணராஜசாகா் அணையில் இருந்து நொடிக்கு 85,117 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து நொடிக்கு 30,458 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

அதாவது, கிருஷ்ணராஜசாகா் மற்றும் கபினி அணைகளுக்கு விநாடிக்கு மொத்தம் 1,09,572 கன அடி தண்ணீா் வந்துகொண்டுள்ளது. இந்த இரு அணைகளில் இருந்தும் சனிக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 1,15,575 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது. கிருஷ்ணராஜசாகா் அணையின் நீா்மட்டம் 123.38 அடியாகவும் (அதிகபட்ச நீா்மட்டம்: 124.80 அடி), கபினி அணையின் நீா்மட்டம் 2282.07 அடியாகவும் (அதிகபட்ச நீா்மட்டம் 2284 அடி) உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com