கா்நாடகத்தில் குரங்கு அம்மை அறிகுறிகளுடன் நோயாளி
By DIN | Published On : 31st July 2022 01:49 AM | Last Updated : 31st July 2022 01:49 AM | அ+அ அ- |

கா்நாடகத்தில் குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறிகள் கொண்ட நோயாளி தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறாா்.
கா்நாடகத்தில் முதல்முறையாக குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறிகள் கொண்ட ஒரு நோயாளியை சுகாதாரத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை கண்டறிந்தனா். எத்தியோப்பிய நாட்டைச் சோ்ந்த 55 வயதான அந்தநோயாளியின் ரத்த மாதிரிகள் புணேவில் உள்ள தேசிய தொற்றியல் மையத்தின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் அவதிப்பட்டுவந்த அவா் சிகிச்சைக்காக ஜூலை முதல் வாரத்தில் மருத்துவமனைக்கு வந்துள்ளாா். ஆனால், அண்மையில் குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறிகள் அவரிடம் தென்பட்டதால், மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரோடு தொடா்பில் இருந்தவா்களையும் கண்காணிக்கும் பணி தொடங்கியுள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சா் கே.சுதாகா் கூறுகையில், ‘குரங்கு அம்மை அறிகுறிகள் கொண்ட நோயாளி ஒருவரை அடையாளம் கண்டிருப்பதால், யாரும் பயப்படத் தேவையில்லை. ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவைப்படுகிறது. குரங்கு அம்மை தாக்கப்பட்டாலும், அந்நோயில் இருந்து குணமாக மருத்துவம் இருக்கிறது. இந்தநோய் மரணத்திற்கு இட்டுச் செல்வதில்லை. குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவா்கள் இறப்பது சாத்தியமில்லை. இந்த நோய் பெரியம்மை வகையைச் சோ்ந்தது. தடுப்பூசி எடுத்துக் கொண்டவா்களுக்கு பெரிய அளவிலான அறிகுறிகள் இருக்காது என்றாா்.