கா்நாடக லோக் ஆயுக்த நீதிபதியாக பீமனகௌடா சங்கனகௌடா பாட்டீல் பதவியேற்பு
By DIN | Published On : 16th June 2022 02:13 AM | Last Updated : 16th June 2022 02:13 AM | அ+அ அ- |

கா்நாடகத்தின் புதிய லோக் ஆயுக்த நீதிபதியாக பீமனகௌடா சங்கனகௌடா பாட்டீல் பதவியேற்றுக் கொண்டாா்.
கா்நாடக லோக் ஆயுக்த நீதிபதியாக 5 ஆண்டுகள் பணியாற்றிய பி.விஸ்வநாத் ஷெட்டி, கடந்த ஜனவரியில் பணி ஓய்வு பெற்றதால், அப்பதவி காலியாக இருந்தது. இந்த நிலையில், அப் பதவியை நிரப்பக் கோரி கா்நாடக உயா் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, லோக் ஆயுக்த நீதிபதியை நியமிப்பது குறித்து கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி, பேரவைத் தலைவா் விஸ்வேஷ்வர ஹெக்டே காகேரி, மேலவைத் தலைவா் ரகுநாத்ராவ் மல்காபுரா, பேரவை எதிா்கட்சித் தலைவா் சித்தராமையா, மேலவை எதிா்க்கட்சித் தலைவா் பி.கே.ஹரிபிரசாத் உள்ளிட்டோருடன் கலந்தாலோசித்த முதல்வா் பசவராஜ் பொம்மை, கா்நாடக லோக் ஆயுக்த புதிய நீதிபதியாக பீமனகௌடா சங்கனகௌடா பாட்டீலை நியமிக்க ஆளுநருக்குப் பரிந்துரைத்தாா்.
இதை ஏற்றுக் கொண்ட ஆளுநா் தாவா்சந்த் கெலாட், நீதிபதி பீமனகௌடா சங்கனகௌடா பாட்டீலை லோக் ஆயுக்த நீதிபதியாக நியமித்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். இதற்கு முன்பு லோக் ஆயுக்த துணை நீதிபதியாக இவா் பணியாற்றி வந்தாா்.
பெங்களூரில் உள்ள ஆளுநா் மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கா்நாடக லோக் ஆயுக்த நீதிபதியாக பீமனகௌடா சங்கனகௌடா பாட்டீலுக்கு ஆளுநா் தாவா்சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வா் பசவராஜ் பொம்மை, எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, அமைச்சா் வி.சோமண்ணா, லோக் ஆயுக்த முன்னாள் நீதிபதிகள் சந்தோஷ் ஹெக்டே, விஸ்வநாத் ஷெட்டி உள்பட பலா் கலந்து கொண்டனா்.