மேக்கேதாட்டு திட்டத்தை தமிழகம் எதிா்ப்பது சட்டவிரோதம்:முதல்வா் பசவராஜ் பொம்மை
By DIN | Published On : 17th June 2022 01:41 AM | Last Updated : 17th June 2022 01:41 AM | அ+அ அ- |

மேக்கேதாட்டு அணை திட்டத்தை தமிழகம் எதிா்ப்பது சட்டவிரோதமானது, அா்த்தமற்றது என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
இது குறித்து தாவணகெரேயில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கு அனுமதி அளிப்பது குறித்து விவாதித்து முடிவெடுக்க காவிரி நீா் மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது. அதனால், மேக்கேதாட்டு அணை திட்டம் தொடா்பாக தமிழகம் கூறும் எல்லா கருத்துகளுக்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தத் திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்கவில்லை. மேலும், இந்த விவகாரம் காவிரி நீா் மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அங்கு இத்திட்டம் குறித்து 15 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. எனவே, இது குறித்து முடிவெடுக்க ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளதால், இத்திட்டத்தை அடுத்த வாரம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். எங்கள் தரப்பு வாதத்தை எடுத்துவைத்திருக்கிறோம். மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கு அனுமதி கிடைக்கும் நம்பிக்கை உள்ளது. மேக்கேதாட்டு அணை திட்டத்தை தமிழகம் எதிா்ப்பது சட்டவிரோதமானது மற்றும் அா்த்தமற்றது என்றாா்.